ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிமுக ஆந்திர அரசுக்கு உதவுகிறார்கள் - வைகோ

திங்கள், 20 ஜூலை 2015 (20:06 IST)
ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆந்திர அரசுக்கு உதவுகிறார்கள் என்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஆந்திர மாநிலம் திருப்பதியில் 20 அப்பாவி தமிழர்கள் கொடூரமாக சித்ரவதை செய்து கொல்லப்பட்டனர். இந்த கொலையில் நீதியை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கையில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு ஈடுபட்டு வருகிறது.
 
அப்பாவி தொழிலாளர்களை கடத்தி சென்று சித்ரவதை செய்து கொலை செய்த ஆந்திர வனத்துறையினர், அந்த தொழிலாளர்கள் செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக கட்டுக்கதை கூறுகிறார்கள். இந்த சம்பவத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் உரிய விசாரணை நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த முக்கிய சாட்சிகளான இளங்கோ, பாலசந்திரன், சேகர் ஆகியோரை சாட்சி மாற்றி கூறும்படி ஆந்திர சிறப்பு புலனாய்வு போலீசார் மிரட்டி வருகிறார்கள். இதற்கு உள்ளூர் அதிமுகவினரும் உதவிகரமாக இருக்கிறார்கள்.
 
இந்த நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நேரடி சாட்சிகளாக உள்ள 3 பேருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். மேலும், ஆந்திர உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்த்துக் கொள்ளுமாறு தமிழக அரசு உடனடியாக மனு செய்ய வேண்டும். இது குறித்து தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காக நேரம் கேட்டு இருக்கிறோம். வருகிற 31 ஆம் தேதிக்குள் சந்தித்து பேச வாய்ப்பு தரவேண்டும்.
 
அப்படி சந்திக்க வாய்ப்பு தராவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம். தமிழ்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியவர் முதலமைச்சர். எனவே, இந்த 20 பேர்களின் குடும்பங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இந்த கொலையை செய்த யாரும் தப்ப முடியாது. கொலை பாதக செயல்களில் ஈடுபட்ட ஆந்திர வனத்துறைக்கு, தமிழக அரசு துணை போகக்கூடாது. எனவே 3 சாட்சிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கி நீதியை நிலைநாட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்