அன்புச் சகோதரி ஜெயலலிதா இருந்திருந்தால் இது நடந்திருக்குமா: வைகோ ஆவேசம்!

வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (15:32 IST)
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க புதிய அணைகளை கட்டப்போகிறோம் என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இதனை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்காது என கூறி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.


 
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
 
இதில் நேற்றைய விசாரணையின் போது, வாதிட்ட கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டினால்தான் முடியும் என கூறியது. இதனை ஏற்றுக்கொள்ளும் வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
கர்நாடகத்தின் வாதத்தை நீதிபதிகள் அப்படியே ஏற்றுக்கொண்டது போல உள்ளது. ஆனால் இது தொடர்பாக தமிழகத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் கர்நாடக அரசு எந்த புதிய அணையையும் கட்டலாம், ஆனால் அந்த புதிய அணையை சிறப்பு ஆணையம் அமைத்து அதன் கட்டுப்பாட்டில் தான் விட வேண்டும் என கூறியுள்ளார்.
 
இது காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் தமிழகம் இதுவரை எடுத்திருந்த நிலைக்கு எதிரானது. கர்நாடக அரசு கூறிய வஞ்சம் நிறைந்த கருத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக்கொண்டதை தமிழக எதிர்த்திருக்க வேண்டும் ஆனால் கர்நாடக அரசு புதிய அணை கட்டிக்கொள்ளலாம் என்ற தொனியில் கூறியிருப்பது தமிழகத்துக்கு பெரும் கேடு விளைவிக்கும்.
 
மேலும் கர்நாடக அரசு கடந்த காலங்களில் கட்டியை அணைகளை காரணம் காட்டிய வைகோ கர்நாடக அரசு தற்போது கூறியுள்ளதை தமிழகம் ஏற்றுக்கொண்டால் சொட்டு நீர் கூட தமிழகத்துக்கு வராது. முன்னாள் முதல்வர் மறைந்த சகோதரி ஜெயலலிதா ஆட்சியின்போது தமிழக நதிநீர் உரிமைகளை மத்திய அரசிடமோ, உச்ச நீதிமன்றத்திலோ இம்மி அளவும் விட்டுக்கொடுக்காமல் தமிழகத்தைப் பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுத்தார்.
 
முல்லைப் பெரியாறு, காவிரி உள்ளிட்ட பிரச்சனைகளில் தமிழ்நாடு சார்பாக வாதாடிய வழக்கறிஞர்களுடன் கலந்து ஆலோசித்து சட்டப்பூர்வமான வாதங்களை முன்வைப்பதற்கு ஆலோசனைகள் வழங்கி தமிழக உரிமைகளை காக்க உறுதியுடன் போராடினார்.
 
இதனை செய்ய தவறிய எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பு வகிக்க தார்மீக தகுதியையும், உரிமையையும் இழந்துவிட்டார். எனவே அவர் உடனடியாக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதற்காக வரும் 21-ஆம் தேதி தனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்துள்ளார் வைகோ.

வெப்துனியாவைப் படிக்கவும்