விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறப்போகும் நிலையில், அந்த தொகுதிகளில் திமுக, அதிமுக சார்பாக பிரச்சாரங்கள் நடந்துவருகின்றன. இந்நிலையில் நேற்று நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளரான ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
இதை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர், புகழேந்தியை ஆதரித்து பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் இல்லை. மத்திய அரசு சமஸ்கிரதம், ஹிந்தி ஆகிய மொழிகளோடு ஹிந்துத்துவாவையும் சேர்த்தே திணித்து வருகிறது என குற்றம் சாட்டினார்.
மேலும், வேளாண் பாதுகாப்பு மண்டலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், பெட்ரோலிய கிணறுகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனையெல்லாம் தடுப்பதற்கு தமிழக அரசுக்கு திராணி கிடையாது, தமிழகம் பாலைவனமாக மாறாமல் இருக்க இந்த ஆட்சியை முதலில் தூக்கி எறியவேண்டும்” என வைகோ கடுமையாக பேசியுள்ளார்.
முன்னதாக மத்திய அரசு ஹிந்தியை திணித்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, மத்திய அரசை கடுமையாக எதிர்த்தார். மேலும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மாநிலங்களவையிலேயே தனது கண்டனங்களை தெரிவித்தார். இந்நிலையில் மத்திய அரசின் திட்டங்களை எதிர்க்க திராணியில்லாத அதிமுகவை தூக்கி வீசுவோம் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.