வைகோவுக்கு திடீர் உடல் நலக்குறைவு

திங்கள், 22 டிசம்பர் 2014 (16:09 IST)
மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை எதிர்த்து, மக்களிடையே விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
 
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசைக் கண்டித்தும், காவிரி பாசனப் பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை எதிர்த்தும், தமிழகத்தில் முழு மதுவிலக்கை வலியுறுத்தியும் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி, இன்று வரை தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட மக்களிடையே வைகோ விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
 
நேற்று நாகை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, உணவு ஒவ்வாமை காரணமாக வைகோவுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. பிரசாரத்தின் ஊடே கட்சிக்காரர்களின் இல்லங்களில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டே பிரசாரம் செய்தார். இந்தச் சூழ்நிலையிலும் நேற்றிரவு நாகபட்டினத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒன்றரை மணி நேரம் வைகோ உரையாற்றினார். 
 
திருவாரூர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த வைகோவுக்கு இன்று காலையில் திடீரென உடல் சோர்வு ஏற்பட்டது. உடனே மருத்துவர்கள் வந்து அவரது உடல்நிலையை பரிசோதனை செய்தனர். ஆனாலும் வைகோ தன்னுடைய பிரசாரப் பயணத்தை நிறைவு செய்வதற்காக இன்று காலையில் விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கினார்.
 
இன்றுடன் காவிரி பாசனப் பகுதியில் பிரச்சாரத்தை முடிக்கும் வைகோ, 23 ஆம் தேதி காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு எதிரில் நடைபெறும் நேதாஜி ஆவணங்களை வெளியிடக்கோரும் அறப்போர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்