அடிமை அரசுக்கு நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை! – உதயநிதி கண்டனம்!

திங்கள், 12 அக்டோபர் 2020 (13:44 IST)
தேனியில் பட்டியலினத்தை சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவர் அவமரியாதை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசுக்கு நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேனி கீழவடகரை பகுதியில் நடந்த ஊராட்சி மன்ற கூட்டத்தில் பட்டியலினத்தை சேர்ந்த பெண் ஊராட்சி தலைவரை தரையில் உட்கார வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ள நிலையில், இதுகுறித்து பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக இளைஞரணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் “திருவள்ளூர்-கடலூர் மாவட்டங்களை அடுத்து தேனி கீழவடகரையில் பட்டியலின பெண் ஊராட்சிமன்ற தலைவருக்கு எதிராக அநீதி தொடர்கிறது. பாஜக மாநில துணைத் தலைவர் தன்னை செயல்படவிடவில்லை என்று அந்த பெண் மக்கள் பிரதிநிதியே கூறுகிறார். ஆனாலும், அடிமை அரசுக்கு நடவடிக்கை எடுக்கத் துணிச்சல் வரவில்லை.” என்று கூறியுள்ளார்.

மேலும் “உள்ளாட்சியில் பட்டியலின, பழங்குடியினருக்கு அதிகாரம் கிடைக்க முறையாக இட ஒதுக்கீட்டு வரையறைகளை செய்ய வேண்டுமெனக் கழகம் நீதிமன்றத்தில் போராடியது. இன்று ஊரக பகுதி பட்டியல்-பழங்குடியின மக்கள் பிரதிநிதிகளை அடிமை அரசு காக்கவில்லை. ஒடுக்கும் சாதியவாதிகள் யாரானாலும் கடும் நடவடிக்கை தேவை.” என்றும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்