எனக்கு பயம்னா என்னனு தெரியாது... கைதாகியும் அசராத உதயநிதி!!

சனி, 21 நவம்பர் 2020 (07:51 IST)
எனது பிரச்சார பயணத்தை திட்டமிட்டபடி தொடர்கிறேன், தொடர்வேன் என உதயநிதி ஸ்டாலின் டிவிட்டர் பக்கத்தில் பதிவு. 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளன. இந்நிலையில் இன்னமும் கூட்டணிகளே முடிவாகாத நிலையிலும் திமுக தனது தேர்தல் பிரச்சார பணியை தொடங்கிவிட்டது.
 
ஆம், விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரச்சார பயணத்தை நேற்று முதல் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாகை மாவட்டம் திருக்குவளையில் துவங்கினார். முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் இருந்து தேர்தல் பரப்புரையைத் துவங்கிய உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
ஆனால், அதன் பின்னர் திருக்குவளையில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் செய்ததாக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு பின்னர் விடுக்கப்பட்டார். இந்நிலையில் இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், 
 
' #விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல்' பிரச்சார பயணத்தின் முதல் நாளிலேயே கிடைத்த எழுச்சி பொறுக்காமல் அடிமை அதிமுக அரசு என்னை கைது செய்தது. எனது கைதிற்கு எதிரான தமிழக மக்களின் கொந்தளிப்புக்கு அஞ்சி தற்போது விடுவித்துள்ளது. எனது பிரச்சார பயணத்தை திட்டமிட்டபடி தொடர்கிறேன், தொடர்வேன் என பதிவிட்டுள்ளார். 
 
உதயநிதி ஸ்டாலின் நேற்று கைது செய்யப்பட்ட போது கனிமொழி போன்ற திமுகவினர் இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்