தமிழக சட்டசபை தொகுதிகளான நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி பகுதிகளுக்கு கூடிய விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் அதன் கூடவே வேலூர் தொகுதியில் நடைபெறாமல் இருக்கும் மக்களவை தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலும் வெகு விரைவில் வரலாம் என்ற நிலை உள்ளது.
சமீபத்தில் திருச்சியில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய உதயநிதி “நாங்குநேரி தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும். வரும் காலங்களில் கூட்டணி அதிகத் தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும்” என கூறினார். இது திமுக காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்படுத்தும் வண்ணம் இருப்பதாக பேச்சு எழுந்தது. அடுத்து சில நாட்களில் திமுக வின் திருச்சி மாவட்ட செயலாளர் கே என் நேருவும் இதேக் கருத்தைத் தெரிவித்தார். அதனால் உள்ளாட்சித் தேர்தலுக்குள்ளாக திமுக- காங்கிரஸ் கூட்டணி உடையும் என்கிற ரீதியில் பேச்சுகள் எழுந்தன.
இதையடுத்து இப்போது உதயநிதி ஸ்டாலின் தான் பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘ திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றுதான் கூறினேன். திமுக- காங்கிரஸ் உறவுக்கு வேட்டு வைக்கும் எண்ணத்தில் பேசவில்லை. இந்தக் கூட்டணி இயற்கையாக மக்கள் பிரச்சனைகளுக்காக உருவானக் கூட்டணி. ஆனால் எதிரணியினரின் கூட்டணி செயற்கையானக் கூட்டணி. அதனால்தான் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.’ என விளக்கமளித்துள்ளார்.