கொரோனா பரவியதை தொடர்ந்து உலக நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியதால் விமான, கப்பல் போக்குவரத்துகள் அனைத்தும் முடங்கி போயின. இதனால் வெளிநாடுகளில் இந்தியாவை சேர்ந்த பலர் சிக்கிக் கொண்டனர். அவர்களை தாயகம் அழைத்து வர மத்திய அரசு ‘வதே பாரத்’ என்ற திட்டத்தை செயல்படுத்தியது. அதன்படி விமானங்களில் பல்வேறு நாடுகளிலிருந்து பலர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் மக்களை கப்பல் மூலம் அழைத்து வரவும் ஏற்பாடாகியுள்ளது. இலங்கை மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வசிக்கும் மக்களை இந்தியா அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி முதலாவதாக இலங்கையிலிருந்து 700 பேர் கப்பல் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். இந்த கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேரும் என்றும், அங்கிருந்து சோதனைக்கு பின் பயணிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மாலத்தீவுகள் மற்றும் ஈரானிலிருந்தும் இந்தியர்கள் பலர் கப்பல் மூலமாக மீட்கப்பட்டு தூத்துக்குடி துறைமுகம் வழியாக அழைத்து வரப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி வ.ஊ.சி துறைமுகத்தில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.