தினகரனை ஆதரித்த 19 எம்.எல்.ஏக்கள், புதுச்சேரியி கடற்கரை பகுதியில் உள்ள விண்ட் ஃபளவர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கிருந்தவாறே அவர்களில் சிலர் பத்திரிக்கையாளர்களுக்கும் பேட்டியளித்தனர். தேவைப்பட்ட போது அவ்வப்போது வெளியே சென்று விட்டு வந்தனர். அந்நிலையில், விடுதியிலிருந்து வெளியேறிய ஜக்கையன் எம்.எல்.ஏ, எடப்பாடி அணி பக்கம் தாவினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தினகரன் தரப்பு, தற்போது மீதமுள்ள 18 எம்.எல்.ஏக்களையும், கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்ததற்கான மொத்த செலவில் ரூ. 18 லட்சத்து 40 ஆயிரம், வாடகை பாக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், அங்கிருந்து எம்.எல்.ஏக்களும் தற்போது கர்நாடக மாநில விடுதிக்கு சென்றுவிட்டனர். எம்.எல்.ஏக்களை நிர்வகித்து வந்த தங்க தமிழ் செல்வனையும், விடுதி நிர்வாகத்தினரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதோடு, குடகு விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்களின் செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.