நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய மோதலால் பள்ளி மாணவரையும், அதனை தடுக்கமுயன்ற அவரது சகோதரியையும், சக மாணவர்கள் அரிவாளால் தாக்கியுள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
அரசு உதவி பெறும் பள்ளியில் 12 ஆம் வகுப்புப் படிக்கும் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சின்னத்துரையோடு ஒப்பிட்டு நன்றாக படிக்கும்படி சக மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை கூறியது, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியதால் இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்திருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் காரணமாக தென்மாவட்டங்களில் பதற்றம் ஏற்படாமல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுப்பதோடு ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள் உரிய கண்காணிப்புடன் மாணவர்களிடையே இத்தகைய மோதல்கள் நேரிடுவதற்கு காரணமான சூழல்களைக் கண்டறிந்து அவற்றைக் களையவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்