டிடிவி தினகரன் கைது?: டெல்லி காவல் துறை இன்று சென்னை வருவதாக தகவல்!

திங்கள், 17 ஏப்ரல் 2017 (12:08 IST)
இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரன் தரப்பு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது.


 
 
டெல்லியில் நட்சத்திர விடுதியில் சுகேஷ் சந்த்ரா என்ற இடைத்தரகரை டெல்லி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். அவரை கைதுசெய்த போது 50 லட்சம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இடைத்தரகர் சுகேஷ் சந்த்ராவிடம் நடத்திய விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை சசிகலா தரப்புக்கு பெற்றுக்கொடுப்பதாக தினகரனிடம் லஞ்சம் வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
இரட்டை இலை சின்னத்தை பெற 60 கோடி ரூபாய் பேரம் பேசி 1.30 கோடி ரூபாய் முன் பணம் பெறப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இதனையடுத்து தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
 
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், இரட்டை இலை சின்னம் தொடர்பாக நான் சுகேஷ் சந்தரிடம் பேசவில்லை. யாரிடமும் பணம் கொடுக்கவிலலை. அவர் யார் என்றே எனக்குத் தெரியாது என மறுத்துள்ளார். இந்நிலையில் டெல்லி காவல் துறை இன்று சென்னை வருவதாக தகவல்கள் வருகின்றன.
 
ஏசிபி சஞ்சை ஷாராவத் தலைமையில் சென்னை வரும் டெல்லி காவல் துறையினர் இன்று மாலை தினகரனை கைது செய்து விசாரணை நடத்தலாம் என கூறப்படுகிறது. இது கிரிமினல் தொடர்பான குற்றச்சாட்டு என்பதால் தினகரன் கைது செய்யப்பட வாய்ப்புகள் அதிகம்.

வெப்துனியாவைப் படிக்கவும்