அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமனம்!

புதன், 15 பிப்ரவரி 2017 (09:55 IST)
அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக சசிகலாவின் உறவினர் டி.டி.வி.தினகரனை நியமித்து உத்தரவிட்டுள்ளார் அதிமுகவின் தற்காலிக பொது செயலாளர் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் சசிகலா ஜெயிலுக்கு செல்ல இருப்பதால் கட்சியை கட்டுப்பாட்டில் வைக்க துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனை நியமித்துள்ளார்.


 
 
கடந்த 2011-ஆம் ஆண்டு கட்சிக்கு துரோகம் இழைத்ததாக சசிகலா, டி.டி.வி.தினகரன், வெங்கடேஷ், நடராஜன் உள்ளிட்ட சசிகலாவின் உறவினர்கள் அனைவரையும் ஜெயலலிதா அதிமுக கட்சியில் இருந்து நீக்கினார்.
 
அதன் பின்னர் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்ததால் சசிகலாவை மட்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டார் ஜெயலலிதா. ஆனால் அவரது உறவினர்கள் யாரையும் ஜெயலலிதா இறக்கும் வரை சேர்க்கவில்லை. ஆனால் தற்போது சசிகலா அவரது சகோதரி மகன் டி.டி.வி.தினகரனை கட்சியில் சேர்த்துள்ளார்.
 
இன்று காலை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான டாக்டர் நமது எம்ஜிஆரில் டி.டி.வி.தினகரன் மற்று டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்ததால் அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வதாக சசிகலா அறிவித்தார்.
 
பின்னர் தற்போது டி.டி.வி.தினகரனை துணை பொதுச்செயலாளராக நியமித்து உத்தரவிட்டுள்ளார் சசிகலா. சசிகலா தனது குடும்பத்தினரை கட்சியில் சேர்த்து பொறுப்பு கொடுத்திருப்பது அதிமுக தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்