கிரானைட் மோசடி: தமிழகம் முழுக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரணை நடத்த டிராபிக் ராமசாமி கோரிக்கை

திங்கள், 8 ஜூன் 2015 (17:38 IST)
பல ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் முறைகேடு தொடர்பாக, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, இன்று மதுரையில், ஐஏஎஸ் அதிகாரி சகாயம் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
 
மதுரை மாவட்டத்தில், பல ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பரபரப்பு புகார்கள் வெளியானது.
 
இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த, சென்னை உயர் நீதிமன்றம் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை நியமித்து உத்தரவிட்டது.
 
இதனையடுத்து, கிரானைட் மோசடி குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அதிரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றார். அதில் பலபல புதிய தகவல்களும், மோசடி குறித்து அதிர்ச்சி தகவல்களும் கிடைத்து வருவதாக கூறப்படுகின்றது.
 
ஏற்கனவே 13கட்ட விசாரணையை முடிந்துள்ள ஐஏஎஸ் அதிகாரி சகாயம், இறுதி கட்ட விசாரணையை கடந்த திங்கள் கிழமை முதல் மதுரையில் மீண்டும் தொடங்கினார்.
 
அதன்படி, இன்று, ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் முன்பு, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
 
பின்பு, சமுக ஆர்வலர் டிராபிக் ராமசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
மதுரை மாவட்டத்தில் மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இது குறித்து இறுதி அறிக்கை தயார் செய்யும் பணியில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
 
மனுதாரர் என்ற முறையில் எனக்கும் சம்மன் அனுப்பியிருந்தார். அதனால், நான் ஆஜராகி என்னிடம் இருந்த ஆவணங்களையும், தகவல்களையும் அளித்துள்ளேன்.
 
கிரானைட் முறைகேடுகள் மதுரை மாவட்டம் இன்றி, நெல்லை, தூத்துக்குடி, கடலூர், வேலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் விசாரணை நடத்தி ஊழலையும், மோசடியையும் வெளிக்கொண்டு வர வேண்டும். அதன் மூலம் ஊழல் அரசியல்வாதிகளும், குற்றவாளிகளும் நீதியின் முன்பு நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்