கார்டனில் சிக்கிய பென் டிரைவ் - சசிகலாவை சிக்க வைக்குமா?

புதன், 22 நவம்பர் 2017 (12:43 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறையினர் கைப்பற்றிய பென் டிரைவில் சசிகலா பற்றிய பல ரகசியங்கள் அடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.


 
ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் சில பென் டிரைவ், லேப்டாப் மற்றும் ஜெ.விற்கு வந்த கடிதங்கள் கைப்பற்றியுள்ளனர்.
 
அப்படி கைப்பற்றப்பட்ட ஒரு பென் டிரைவில் உள்ள விவகாரங்கள், மன்னார்குடி கும்பலுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பது தெரியவந்துள்ளது.
 
அதாவது, ஜெ.வை ஒதுக்கிவிட்டு அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக, பெங்களூரில் உள்ள ஒரு ஹோட்டலில் சசிகலாவின் உறவினர்கள் நடத்திய உரையாடல் தொடர்பான தகவல்களை அந்த பென் டிரைவில் ஜெ. வைத்திருந்தார் எனக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில்தான் 2011ம் ஆண்டு சசிகலா உட்பட அவரின் குடும்ப உறுப்பினர்களை கார்டன் வீட்டிலிருந்து வெளியேற்றினார் ஜெயலலிதா. 


 

 
மேலும், சசிகலா குடும்பத்தினரின் அரசியல் தலையீடு, சேர்த்த சொத்துகள், அவை யார் யார் பெயரில் உள்ளன, அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரங்களை அப்போது தமிழக போலீஸின் உளவுத்துறை தலைமைப் பொறுப்பில் இருந்த ராமானுஜம் ஜெ.விற்கு சேகரித்துக் கொடுத்தார். அந்த தகவல்களும் அந்த பென் டிரைவில்தான் இருந்ததாக கூறப்படுகிறது.
 
இந்த தகவல் எப்படியோ மத்திய உளவுத்துறை அதிகாரிகள் மூலம், டெல்லியில் கூறப்பட, கார்டனுக்குள் வருமான வரித்துறையினர் நுழைந்து அதை கைப்பற்றியுள்ளனர் எனக்கூறப்படுகிறது.
 
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, போயஸ்கார்டனில் வேலை பார்த்த ஒரு பெண் திடீரெனெ காணாமல் போய்விட்டார் என அப்போதே செய்திகள் வெளியானது. மேலும், அவரிடம் தான் அந்த பென் டிரைவ் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், அந்த பென் டிரைவ் கார்டன் வீட்டில் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து தற்போது கைப்பற்றியுள்ளனர்.
 
அந்த பென் டிரைவில் கிடைக்கும் ஆதரங்களின் அடிப்படையில் வருமான வரித்துறை மீண்டும் தனது சாட்டையை சுழற்றும் என்பதால், இந்த விவகாரம் சசிகலா தரப்பினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்