தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்று முதல் புதிய தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. என்றாலும் தரிசனத்திற்கு முன்பதிவு செய்து வர வேண்டும் என கூறியிருந்த நிலையில் முன்பதிவுகள் குறைவாக இருந்ததால் உள்ளூர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும் அதிகாலை 4 மணி முதலே கூட்டம் குவிய தொடங்கியுள்ளதால், பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட போலீஸார் மக்களை சமூக இடைவெளியோடு நிற்க செய்து கோவிலுக்குள் அனுமதித்துள்ளனர். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக லட்டு பிரசாதம் அளிக்கவில்லை என்பதுடன் 10 வயதிற்கு குறைவானவர்கள் மற்றும் 60 வயதிற்கு அதிகமானவர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவிலுக்குள் செல்பவர்களுக்கு சானிட்டைசர் வழங்கி கைகளை சுத்தம் செய்வது, வெப்பநிலை கணக்கிடுதல் சோதனைகளுக்கு பிறகு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.