டிஎன்பிஎஸ்சி பெயரில் போலி ரிசல்ட் வெளியீடு? – டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
வெள்ளி, 25 நவம்பர் 2022 (10:38 IST)
டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் என போலியான பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணிகளுக்கான தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதில் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் நேர்க்காணல் நடத்தப்பட்டு பணியமர்த்தப்படுகிறார்கள்.
கடந்த ஜூலை 2ம் தேதி நடந்த ஒருங்கிணைந்த பொறியாளர் பதவிகளுக்கான ரிசல்ட் வெளியானதாக போலியான பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருவதாக டிஎன்பிஎஸ்சி எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அறிவிப்பில் “ஒருங்கிணைந்த பொறியாளர் பதவிகளுக்கான போட்டி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதாக போலியான பட்டியல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதை யாரும் நம்ப வேண்டாம். பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வேலை வாங்கி தருவதாக கூறும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். டிஎன்பிஎஸ்சியின் அனைத்து தேர்வு முடிவுகளையும் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே காணமுடியும்” என கூறப்பட்டுள்ளது.