திரையரங்குகள் ஸ்டிரைக் வாபஸ் : பேச்சு வார்த்தையில் உடன்பாடு

வியாழன், 6 ஜூலை 2017 (16:29 IST)
தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களாக திரையரங்க உரிமையாளர்கள் நடத்திய போராட்டம் முடிவிற்கு வந்துள்ளது.


 

 
ஏற்கனவே ஜி.எஸ்.டி வரி 28 சதவீதமாக இருக்கும் போது, தமிழக அரசு சார்பு கேளிக்கை வரியை 30 சதவீதமாக அதிகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன.  ஏறக்குறைய 1000 திரையரங்குகள் மூடிக்கிடந்ததாத தெரிகிறது. இதனால் சினிமா துறைக்கு தினமும் ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது.
 
இது தொடர்பாக தமிழ்நாடு திரையரங்க வர்த்தக சபையின் தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில், தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. 
 
இந்நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதாவது, இதுகுறித்து விவாதித்து முடிவு செய்ய பேச்சுவார்த்தை குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும், இதில் திரைத்துறை சார்பில் சிலரும், அரசு சார்பில் சிலரும் பங்கேற்பார்கள் என அபிராமிநாதன் செய்தியாளர்ளிடம் கூறினார். அவர்கள் அனைவரும் சேர்ந்து கேளிக்கை வரி எவ்வளவு விதிப்பது என்பது பற்றியோ அல்லது முழுமையாக அதை ரத்து செய்வது பற்றியோ விவாதிப்பார்கள் எனத் தெரிகிறது.
 
இதனைத் தொடர்ந்து நாளை முதல் தமிழகமெங்கும் தியேட்டர்கள் வழக்கம் போல் திறந்திருக்கும் என அபிராமிநாதன் அறிவித்தார். ஆனால், நாளை தியேட்டர்களின் டிக்கெட்டுகளின் விலையோடு, கூடுதலாக ஜி.எஸ்.டி தொகையை மக்கள் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்