ஐஐடி நுழைவுத்தேர்வு: மாணவர்களின் எதிர்காலத்தில் அக்கறை இல்லாத தமிழக அரசு - ராமதாஸ் குற்றச்சாட்டு

ஞாயிறு, 21 ஜூன் 2015 (02:17 IST)
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மேல்நிலை மாணவர்களுக்கு, ஐஐடி நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகளை, சிறந்த நிறுவனங்கள் மூலம் நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் (ஐஐடி) மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற்ற மாணவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வழக்கம் போலவே, இந்த ஆண்டும் ஐஐடி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு பாடத்திட்ட மாணவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
 
இந்தியா முழுவதும் 18 ஐஐடிக்களில் உள்ள 10,066 மாணவர் சேர்க்கை இடங்களை நிரப்புவதற்காக ஐஐடி கூட்டு நுழைவுத் தேர்வு (முதன்மை), ஐஐடி கூட்டு நுழைவுத் தேர்வு (உயர்நிலை) என இரு கட்டத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் மொத்தம் 26,456 மாணவர்கள் தேர்ச்சி பெற்று கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.
 
இவர்களில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 33 மட்டுமே. கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 65 ஆக இருந்தது. இது மிகவும் குறைவு என கல்வியாளர்களால் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டில் அதில் பாதியளவு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது கவலையளிக்கிறது.
 
இந்தத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில் 57 விழுக்காட்டினர், அதாவது 15,311 பேர் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தில் பயின்றவர்கள் ஆவர்.
 
இவர்களுக்கு அடுத்தபடியாக ஆந்திர மாநில பாடத்திட்டத்தில் பயின்ற 2938 பேரும் (11.10%), மராட்டிய மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களில் 1,787 பேரும் (6.76%), ராஜஸ்தான் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்களில் 1,610 பேரும் (6.08%) ஐஐடிக்களில் சேர தகுதி பெற்றுள்ளனர்.
 
கல்வியில் பின்தங்கிய மாநிலங்களாக கருதப்படும் பிகார், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பாடத் திட்டங்களில் பயின்றவர்கள் கூட குறிப்பிடத்தக்க அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள் தான் இந்தப் பட்டியலில் மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
 
தேசிய அளவில் இன்றி, மாநில அளவில் பார்த்தாலும் தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து இந்தத் தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை 2815 பேர். இவர்களில் 451 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
 
மத்திய இடைநிலைக் கல்வி வாரிய மாணவர்களில் 1045 பேர் இத்தேர்வை எழுதி அவர்களில் 418 பேர் அதாவது 40% தேர்ச்சி எழுதினர். ஆனால், தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர்களில் 1770 பேர் இத்தேர்வில் பங்கேற்று 33 பேர் அதாவது 1.66% மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதிலிருந்து தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டம் எவ்வளவு மோசமான நிலைமையில் உள்ளது என்பதை அறியலாம்.
 
இப்போது மட்டும் அல்ல, ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தான் தொடர்கிறது. இந்த நிலையை மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
 
ஆனால், மாணவர்களின் எதிர்காலத்தில் எந்த அக்கறையும் இல்லாத தமிழக அரசு இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் மாணவர்களுக்கு ஏட்டு சுரைக்காயை விற்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
 
ஆந்திரா, இராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மேல்நிலைக் கல்விக்கான பாடத்திட்டம் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் தகுதிப்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால், தமிழ்நாடு பாடத்திட்டமோ மனப்பாட கல்வியை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
 
உயர் தொழில்நுட்பக் கல்வி பயிலும் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருப்பதற்கு தமிழக அரசின் தொலைநோக்கற்ற கல்வித் திட்டம் தான் முதன்மைக் காரணம் என்றாலும், இந்த அவலநிலைக்கு தமிழகத்தைத் தள்ளியதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கும் பங்கு இருப்பதை மறுக்க முடியாது.
 
ஆந்திரா மற்றும் மராட்டியத்தைச் சேர்ந்த மாணவர்களை விட தமிழக மாணவர்கள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல. ஆனால், இப்பந்தயக் குதிரைகள் கண் மறைப்பு கட்டப்பட்டு மருத்துவப் படிப்பு, பொறியியல் படிப்பு ஆகிய இலக்குகளை நோக்கி ஓட வைக்கப்படுவதால் இதைவிட சிறந்த இலக்குகள் எதுவுமே அவர்களுக்கு தெரிவதில்லை.
 
ஐஐடி கல்வி வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்களும் விளக்குவதில்லை. நடப்பாண்டில் 9 லட்சம் பேர் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், அவர்களில் 1770 பேர் (0.20%) மட்டுமே ஐஐடி நுழைவுத் தேர்வில் பங்கேற்றனர். இது நாம் வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
 
மாணவர்களின் நலன் கருதி அத்திப் பூத்தாற்போல் செயல்படுத்தப்படும் சில நல்லத் திட்டங்களும் தொடர்வதில்லை. சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களை இத்தேர்வுக்கு தயார் படுத்தும் வகையில் அவர்களுக்கு ஒரு நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கும் திட்டம் கடந்த 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஏழை மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. ஆனால், இத்திட்டம் கடந்த ஆண்டுடன் கைவிடப்பட்டு விட்டது.
 
இப்போதைய நிலையில், ஐஐடி போன்ற உயர்தொழில்நுட்பக் கல்வி தமிழக மாணவர்களுக்கு சாத்தியமாக வேண்டுமானால் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தை மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்திற்கு இணையானதாக மாற்றப்பட வேண்டும்.
 
அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மேல்நிலை மாணவர்களுக்கு, ஐஐடி நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகளை சிறந்த நிறுவனங்கள் மூலம் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்