சிறார்களை பயன்படுத்தி ஆபாச வீடியோக்கள் எடுத்தாலோ அதை பகிர்ந்தாலோ தண்டனை வழங்கப்படும் என துணை டிஜிபி ரவி கடந்த மாதம் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து தமிழகத்தின் பல இடங்களில் குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பகிர்ந்தவர்கள், பதிவிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
இந்நிலையில் குழந்தைகளை பயன்படுத்தி டிக்டாக் போன்றவற்றில் வீடியோ பதிவிடுபவர்களையும் கைது செய்ய இருப்பதாக காவல்துறை வெளியிட்ட அறிவிப்பால் மக்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமீப காலமாக குழந்தைகளை பயன்படுத்தி குறும்புதனமான வீடியோக்களை தயார் செய்து அதை டிக்டாக் போன்ற செயலிகளில் பதிவிடுவது அதிகரித்துள்ளது. அதில் கிடைக்கும் பரவலான வரவேற்பு, லைக்ஸ் மற்றும் ஷேருக்காக பல பெற்றோர்களே குழந்தைகளை இம்சித்து இதுபோன்ற வீடியோக்களை தயாரிக்கிறார்கள்.
குழந்தைகளை இம்சித்து கேளிக்கை என்ற பெயரில் இதுபோன்று வீடியோக்கள் செய்பவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என காவல்துறை அதிகாரி டிஜிபி ரவி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது குழந்தைகளை வைத்து டிக்டாக் செய்யும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் குழந்தைகளை கடத்துவது போல மிரட்டுவது, சாப்பிட செல்ல விடாமல் தடுப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.