கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், மக்கள் சிலர் சாலைகளில் சுற்றி வருவது குறைந்தபாடில்லை. அத்தியாவசிய கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையிலும், பொருட்கள் வாங்க செல்வதாக மக்கள் தொடர்ந்து சாலைகளில் நடமாடி கொண்டே இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளில் இறங்கிய போலீஸார் வாகனங்களில் செல்பவர்களுக்கு நூதனமான தண்டனைகள் அளித்தல், கைது செய்தல், வழக்கு பதிவு செய்தல் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று வரை தமிழத்தில் ஊரடங்கை மீறியதாக 42,035 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 46,970 பேர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. பல்லாயிரக்கணக்கான வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.