வருமானம் இல்லை ; ஜெ. மூடிய 500 கடைகளை திறக்கும் முயற்சியில் தமிழக அரசு?

புதன், 12 ஏப்ரல் 2017 (17:23 IST)
நீதிமன்ற உத்தரவின் பேரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டதால், மறைந்த ஜெயலலிதா மூடிய 500 கடைகைளை திறக்க  தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது டாஸ்மாக் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என திமுக உள்ள கட்சிகள் பிரச்சாரம் செய்தன. எனவே, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படையாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார்.
 
அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வர் பதவியில் அமர்ந்தவுடன், விற்பனை இல்லாத, பள்ளி மற்றும் கோவிலுக்கு அருகில் இருந்த 500 கடைகளை மூட உத்தரவிட்டார். அதன்பின் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான போது அதேபோல் மேலும் 500 கடைகள் மூடப்பட்டன. 
 
இந்நிலையில் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவே, வேறு வழியில்லாமல் 3 ஆயிரத்து 300 கடைகளை தமிழக அரசு மூடிவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
 
மீதமிருக்கும் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலை மோதி வருகிறது. மேலும், டாஸ்மாக் மூலம் கிடைக்கும் தமிழக அரசிற்கு கிடைக்கும் வருமானம் பெருமளவு குறைந்தது. 
 
எனவே, வருமானத்தை அதிகரிக்க ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மூடிய 1000 கடைகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுகு தொலைவில் அமைந்துள்ள கடைகளை கணக்கெடுத்து அவற்றை ஒவ்வொன்றாக திறக்கும் முயற்சியில் டாஸ்மாக் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்