விஜயகாந்தை "குடிமகன்" என விமர்சிப்பதா?: கருணாநிதி கண்டனம்

வியாழன், 26 பிப்ரவரி 2015 (10:56 IST)
சட்டப்பேரவையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை "குடிமகன்" என்று விமர்சிப்பதா? என்று திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அதிமுக ஆட்சியில் மரபுகள் அனைத்தையும் கைவிட்டு, எதை வேண்டுமானாலும் செய்கின்றனர். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு சட்டப்பேரவையில் பிறந்த நாள் வாழ்த்துக் கூறுகின்றனர்.
 
அதேசமயம், எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த்தை "குடிமகன்" என்று பேரவையில் விமர்சனம் செய்கின்றனர். அதை எதிர்த்துக் கருத்துக் கூற, அந்தக் கட்சியின் சார்பில் எழுந்தால், ஜனநாயக ரீதியாக அனுமதி அளிக்காமல் அவையில் இருந்து காவலர்கள் மூலம் வெளியேற்றுகின்றனர்.
 
பின்னர், அந்தக் காவலர்களில் ஒருவரை மருத்துவமனையில் அனுமதிக்கச் செய்து, அவரிடமே புகார் மனு எழுதி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கைது செய்ய முற்படுகின்றனர். இவை அனைத்தும் சரியான நடைமுறைகள் இல்லை.
 
நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு செயலுக்கு, உரிமைக் குழு நடவடிக்கை, காவல்துறை நடவடிக்கை எனப் பலமுனை நடவடிக்கை இயற்கை நீதிக்கு ஏற்றதுதானா என்பதை ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டிய அம்சமாகும்.
 
ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. கடந்த ஆண்டு என்ன செய்தோம் என்பதற்கான விளம்பர உரையாக இருக்கிறது என்று குறிப்பிட்டேன். இந்தக் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில்தான் பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தந்த பதில் உரையும் இருந்தது. கடந்த ஆண்டில் செய்ததையே குறிப்பிட்டவர், இந்த ஆண்டு செய்யப்போவதைப் பற்றிக் குறிப்பிடவில்லை" என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்