தொகுதிக்கு சென்ற கருணாஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம்!

வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (14:00 IST)
நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் நேற்று அறிவித்தபடி இன்று தனது திருவாடனை தொகுதிக்கு மக்களை சந்திக்க சென்றார். அங்கு அவருக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதனல் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


 
 
சசிகலா அணியை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியை நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. அதிலும் திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் மீது அசிங்கமான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
 
முக்குலத்தோர் புலிப்படை சார்பாக அதிமுகவுடன் கூட்டணி வைத்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகர் கருணாஸ். இவர் அதிமுக இரண்டாக பிளவுபட்டதும் சசிகலா அணிக்கு ஆதரவு வழங்கினார்.
 
கூவத்தூர் சொகுசு விடுதியில் எம்எல்ஏக்கள் அனைவரும் இருந்தபோது கருணாஸ் குத்துப்பாட்டு போட்டு ஆட்டம் போட்டதாகவும், விபச்சார அழகிகளை அழைத்து வந்ததாகவும் சகட்டுமேனிக்கு இவர் மீது விமர்சனம் வைக்கப்பட்டது. மேலும் சமூக வலைதளங்களில் கருணாஸ் மீது ஏகத்துக்கும் கீழ்த்தரமாக விமர்சனம் வைத்தனர்.
 
கருணாஸ் குறித்து வைக்கப்பட்ட விமர்சனங்களில் பெரும்பான்மையானவை ஏ வகையை சேர்ந்தவை. இதனால் கோபமடைந்த கருணாஸ் இன்று காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ் தனது ஆதங்கங்களை கொட்டினார். இந்நிலையில் தனது திருவாடனை தொகுதி மக்களை கருணாஸ் இன்று சந்திப்பதாக கூறியிருந்தார்.
 
இதனையடுத்து இன்று காலை தனது திருவாடனை தொகுதிக்கு சென்ற கருணாஸ் தனது ஆதரவாளர்களுடன் திருவாடனைக்கு சென்றார். அங்குள்ள பஸ் நிலையம் பகுதிக்கு கருணாஸ் சென்றபோது அங்கு திரண்டிருந்த மக்கள் திடீரென கருணாஸ் ஒழிக என கோஷமிட்டனர்.
 
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த திருவாடனை காவல் ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் காவலர்கள் கருணஸுக்கு எதிராக கோஷமிட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல வைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்