ஒரு பைசாக்கூட கொடுக்காமல் வெற்றிபெற்றேன் – திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி !

ஞாயிறு, 26 மே 2019 (13:19 IST)
வெற்றிக்குப் பின்னர் தமிழகக் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் பேச்சு திமுக தலைமைக்கும் தொண்டர்களுக்கும் அதிருப்தியை அளித்துள்ளது.

17 ஆவது மக்களவைத் தேர்தலில் 350 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க இருக்கிறது பாஜக. காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. நாடு முழுவதும் காவி மயமாகிக் கொண்டிருக்கும் வேளையில் தமிழகம் மட்டும் இன்னமும் கருப்புமயமாகவே இருக்கிறது.

தமிழகத்தில் மொத்தமாக தேர்தல் நடந்த 39 தொகுதிகளில் 38-ல் வெற்றி பெற்று திமுக கூட்டணி அசத்தியுள்ளது. பாஜக கூட்டணிக் கட்சிகள் ஒரே ஒருத் தொகுதியை மட்டுமேக் கைப்பற்றியுள்ளன. தமிழகத்தில் பல தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெருவாரியான வெற்றியைப் பெற்றுள்ளன. அதில் முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசரும் ஒருவர். திருச்சியில் போட்டியிட்ட அவர் 4.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளார்.

வெற்றிக்குப் பின்னர் ஊடகங்களிடம் பேசிவரும் அவர் தொடர்ந்து ‘திருச்சி வாக்காளர்களுக்கு  நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன். ஏனெனில் ஒரு பைசா கூட கொடுக்காமல் வெற்றிபெற்றிருப்பது மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தருகிறது’ எனக் கூறி வருகிறார். அவரது இந்த பேச்சால் திமுகவினர் அதிருப்தியடைய ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் மட்டும் காசு கொடுக்காமல் வெற்றி பெற்றேன் என சொன்னால் மற்றவர்கள் எல்லோரும் காசு கொடுத்து வெற்றி பெற்றார்களா என மக்கள் நினைக்க மாட்டார்களா என தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இந்த விஷயம் திமுக தலைவர் ஸ்டாலின் வரை சென்றுள்ளதாகத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்