திருமாவளவன் அறிக்கை:-
பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கும்போது 'கிரீமி லேயர்' வருமான வரம்பைக் கணக்கிடுவதில் புதிய அம்சங்களை சேர்க்கும் மத்திய அரசின் முயற்சியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். கிரீமிலேயர் முறையை முற்றாகக் கைவிடவேண்டும் எனவும் அதற்காக எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சட்டத் திருத்தம் கொண்டுவரவேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
மண்டல் கமிஷன் வழக்கில் 1992ஆம் ஆண்டு தீர்ப்பளித்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதிசெய்தது. ஆனால், பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதார ரீதியில் முன்னேறியவர்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது எனக் கூறி ‘கிரீமிலேயர்’ என்ற பொருளாதார அளவுகோலை உருவாக்கியது. அதனடிப்படையில் ஒரு லட்ச ரூபாய் ஆண்டு வருமானம் உள்ளவர்களின் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை என வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த வரம்பு உயர்த்தப்பட வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. அவ்வாறு உரிய காலத்தில் அந்த வரம்பு உயர்த்தப்படவில்லை. 12 ஆண்டுகள் கழித்து 2004 ஆம் ஆண்டுதான் அது ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. 2008ஆம் ஆண்டு 4.5 லட்சம் என ஐக்கிய முன்னணி அரசு அந்த வருமான வரம்பை உயர்த்தியது. அதன்பின்னர் 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அந்த வரம்பை ரூ.12 லட்சமாக உயர்த்துமாறு கடிதம் அளித்து வலியுறுத்தினோம். அதனடிப்படையில் 2013 மே மாதத்தில் கிரீமிலேயர் வரம்பை ரூ.6 லட்சமாக மட்டும் உயர்த்தி மத்திய அரசு ஆணை வெளியிட்டது. அது 2017ஆம் ஆண்டு ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது.
கிரீமிலேயர் வரம்பை இந்த ஆண்டு சீராய்வு செய்யவேண்டிய நிலையில் அதனை ரூ.16 லட்சமாக உயர்த்தவேண்டும் என இப்போது மத்திய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதற்கு எந்த பதிலையும் சொல்லாத மத்திய அரச, கிரீமிலேயரைக் கணக்கிடும்போது பெற்றோரின் சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தையும் சேர்த்து அரசு திருத்தம் கொண்டுவருகிறது. இதனால் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் இட ஒதுக்கீடு பெற முடியாமல் ஆக்கப்படுவர். இது பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டு உரிமையை முற்றாக ஒழிப்பதற்கான சதியாகும். இந்த சமூக அநீதியை மத்திய அரசு உடனே நிறுத்திக்கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறோம்.