அடப்பாவிகளா! டிக்கெட் கிடைக்காததுக்கு நீங்கதான் காரணமா? – 60 ஏஜெண்டுகள் கைது!

புதன், 19 பிப்ரவரி 2020 (15:58 IST)
ரயில் முன்பதிவில் தட்கல் டிக்கெட்டுகளை தடைசெய்யப்பட்ட மென்பொருள் மூலம் முறைகேடு செய்த ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திட்டமிடாமல் அவசரமாக ரயில்களில் பயணம் செய்யும் நிலை ஏற்படும்போது உடனடியாக டிக்கெட் பெறுவதற்காக தட்கலில் விண்ணப்பிக்கும் முறை இருந்து வருகிறது. அவசரமாக வெளியூர்களுக்கு செல்பவர்கள் இந்த தட்கல் டிக்கெட் பதிவை நம்பிதான் இருக்கிறார்கள். ஆனால் தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முழுவதுமாக விற்று தீர்ந்து விடுகின்றன. இதனால் ரயில் நிலையங்களில் தட்கல் பதிவுக்காக காத்திருப்போர் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

இந்நிலையில் தட்கல் டிக்கெட் பதிவில் முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் ரெயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஐஆர்சிடிசி தளத்தை ஏஜெண்டுகள் சிலர் தடைசெய்யப்பட்ட மென்பொருட்களை பயன்படுத்தி முடக்கியதும், அதன் மூலம் வேகமாக தட்கல் டிக்கெட்டுகளை பதிவு செய்து கொண்டதும் அம்பலமாகியுள்ளது. இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்ட 60 ஏஜெண்டுகள் பல்வேறு கோட்டங்களில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த தடைசெய்யப்பட்ட மென்பொருள்களும் முடக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இவர்கள் ஆண்டுக்கு 100 கோடி வரை வருமானம் பார்த்திருப்பதாக கூறப்படுகிறது.

பல நாட்களாக மக்கள் பலருக்கு தக்கல் டிக்கெட் கிடைக்காததற்கு இந்த ஏஜெண்டுகளே காரணம் எனவும், இனி அனைவருக்கும் தக்கல் டிக்கெட் எளிதில் கிடைக்கும் எனவும் ரயில்வே பாதுகாப்பு படை ஜெனரல் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்