அண்ணன் தம்பிகள் ஓட ஒட வெட்டிக் கொலை : சினிமா பாணியில் பழிக்கு பழி

புதன், 16 டிசம்பர் 2015 (12:21 IST)
மதுரை அருகே மூன்று சகோதரர்கள் நடு ரோட்டில் ஓட ஒட வெட்டிக் கொல்லப்பட்டன. பழிக்கு பழியாக இந்த கொலை நடந்துள்ளது.


 

 
மதுரை மாவட்டத்தில் அண்ணன் தம்பிகள் மூன்று பேர் ஒரே மோட்டார் சைக்கிளில், பேரையூர் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்த போது, வேகமாக வந்த ஒரு கார் அவர்கள் மீது மோதியது. இதில் அவர்கள் மூவரும் கீழே விழுந்தனர்.
 
அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன், காரில் இருந்து இறங்கிய ஆறு பேர் கொண்ட கும்பல் அவர்கள் மூவரையும் விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்தது. அதன் பின் அந்த கும்பால் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. அவர்கள் பயன்படுத்திய காரை ஓட்டி வந்த டிரைவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரை விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.
 
மதுரை மாவட்டம், டி.கல்லிபட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த நாகேஷிற்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்தது.
 
இந்நிலையில், சில வருடங்களுக்கு முன் நாகேஷ் உடல் நலக் குறைவால் இறந்து போனார். தன்னுடைய தந்தை இறந்து போனதற்கு, ஜெயராமன் தான் காரணம் என்று நினைத்த அவரது மகன்கள், முத்தியா(21), கருப்பசாமி(20) மற்றும் பாண்டி(18) ஆகிய மூவரும், அடிக்கடி ஜெயராமனை சந்தித்து உன்னையும் உன் மகனையும் ஒரு நாள் கண்டிப்பாக கொன்றே தீருவோம் என்று சொல்லி வந்தனர்.
 
அண்ணன், தம்பிகள் மூவரும் ஒன்றாக ஒரே மோட்டார் சைக்கிளில் ஊருக்குள் வலம் வருவார்களாம்.  ஜெயராமன் குடும்பத்தை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று காத்திருந்த அந்த மூவரும், 2013 ஆம் ஆண்டு ஜெயராமனின் மகன் கோச்சடையானை துடிக்க துடிக்க வெட்டிக் கொன்றனர்.
 
அதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர்கள் ஜாமீனில் வெளிவந்து ஜெயராமனையும் வெட்டி கொலை செய்தனர். இதனையடுத்து காவல்துறை அவர்களை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தது. 
 
அதன் பின் ஜாமீனில் வெளிவந்த அவர்கள், நேற்று கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு திரும்பும் போதுதான், அவர்கள் மூவரையும் கூலிப்படையினர் வெட்டிக் கொலை செய்துள்ளனர். 
 
இதில் பாண்டியும் கருப்பசாமியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முத்தையா உயிருக்கு ஆபத்தான நிலையில்,அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
ஜெயராமன் குடும்பத்தை கொலை செய்ததற்கு பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்துள்ளதை போலிசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த கொலையில் ஈடுபட்ட மற்ற கூலிப்படையினரை போலிசார் தேடி வருகிறார்கள். 
 
இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்