இதுவரை இப்படி நடந்ததில்லை! தமிழகத்தை உலுக்கும் மழை! – பருவநிலை மாற்றம் காரணமா?

செவ்வாய், 19 டிசம்பர் 2023 (09:11 IST)
மிக்ஜாம் புயல் சென்னையில் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்தே தமிழகம் இன்னும் மீளாத சூழலில் அடுத்து தென் மாவட்டங்களில் மிகப்பெரும் ருத்ர தாண்டவத்தை அரங்கேற்றியுள்ளது பருவமழை.



திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களில் பெய்துள்ள பேய் மழையால் நீர்நிலைகள் நிரம்பி பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜீவநதியான தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளம் பாலங்களை தாண்டியும் ஆக்ரோஷமாக பாய்ந்து வருகிறது.

தூத்துக்குடியின் காயல்பட்டிணத்தில் 90 செமீ அளவில் ஒரே நாளில் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து முடித்துள்ளது வானிலை ஆய்வாளர்களையும், இயற்கை ஆர்வலர்களையும் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

இப்படி ஒரு எதிர்பாராத பெரும் கனமழை பெய்தது எப்படி என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் “இலங்கைக்கு தென் கிழக்கே நிலவிய வளிமண்டல சுழற்சி , நீண்ட நேரமாக குமரிக்கடல் பகுதியிலேயே நீடித்தது. பின்னர் அங்கிருந்து மணிக்கு 4 கி.மீ என்ற குறுகிய வேகத்தில் தென் மாவட்டங்களை கடந்தது. அதனால் காற்றின் திசை மாறுபாடு, காற்றின் ஈரப்பதம் அதிகளவில் குவிதல் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு தென் மாவட்டங்களில் மழை கொட்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் “காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு பகுதி போன்றவை உருவாகும்போதுதான் இந்த அளவு அதிகனமழை இருக்கும். ஆனால் வளிமண்டல சுழற்சியால் இவ்வளவு அதிகமழை பெய்திருக்கிறது. இதுவரை இதுபோல் நடந்தது இல்லை” என்று கூறியுள்ளார்.



அவரது கூற்றுக்கு பொருந்தும் வகையில் பருவநிலை மாற்றம் குறித்து பேசி வரும் இயற்கை ஆர்வலர்கள் பலரும் பருவநிலை மாற்றம் நடந்து வருவதன் அறிகுறியே இந்த எதிர்பாராத கனமழை என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

கடந்த 1992ம் ஆண்டில் மாஞ்சோலையில் 96.5 செ.மீ மழை பெய்தது. தமிழக வரலாற்றிலேயே மிக அதிகமான மழைப்பொழிவு அதுவாகும். அதற்கு அடுத்தப்படியாக தற்போது காயல்பட்டிணத்தில் 93.2 செ.மீ மழை பெய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சில நாட்களுக்கு முன்பு புயல் காரணமாக 80 செ.மீ வரை மழை பொழிந்துள்ளது. இதே டிசம்பர் மாதத்தில் தான்சானியா, அமெரிக்காவின் வாஷிங்டன் ஆகிய பகுதிகளிலும் வழக்கத்திற்கு அதிகமான மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு மழைப்பொழிவு அதிகரிக்கும் அதேசமயம் ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதியில் கடும் வெப்ப அலை, உக்ரைன், பல்கேரியாவில் கடும் பனி என அனைத்து பருவக்காலங்களும் அளவுக்கு மீறிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதையும் பருவநிலை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனால் உலக நாடுகள் பருவநிலை மாற்றம் குறித்தும், அதற்கு மக்களை தயார் படுத்துவது குறித்தும் ஆலோசிக்க வேண்டிய அவசியத்தில் உள்ளதாக அவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்