”ரஜினி-கமல் இணைவது மக்களுக்காக அல்ல”.. திருமா குற்றச்சாட்டு

Arun Prasath

வெள்ளி, 22 நவம்பர் 2019 (12:15 IST)
ரஜினி-கமல் இணைவது நாட்டு மக்கள் பிரச்சனைக்காக அல்ல, தனிப்பட்ட பிரச்சனைக்காக தான் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியதிலிருந்து மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து வருகிறார். அதே போல் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்றாலும் கூட அரசியலுக்குள் நுழைவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருவதால் “தமிழகத்தில் வெற்றிடம் நிலவுகிறது” என அடிக்கடி பேசி வருகிறார்.

இந்நிலையில் ”நானும் ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தமிழக மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிப்போம்” என கூறினார். இதனை தொடர்ந்து சமீபத்தில் ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், ”தேவைப்பட்டால் இருவரும் தமிழக மக்களின் நலனுக்காக சேர்ந்து பயணிப்போம்” என கூறியுள்ளார்.

இது குறித்து பல அரசியல் தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தொல்.திருமாவளவன், ரஜினியும் கமலும் இணைவது நாட்டு மக்களின் பிரச்சனைக்காக அல்ல, அது அவர்களின் தனிபட்ட பிரச்சனைக்காகவே என கூறியுள்ளார்.

முன்னதாக ரஜினி மற்றும் கமல் ஆகியோரி அரசியல் நுழைவை பல முறை கடுமையாக விமர்சித்து வந்துள்ள திருமாவளவன் தற்போது ரஜினி-கமல் இணைவது குறித்தும் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்