அவர் மீது 23 வழக்குகள் போடப்பட்டு 55 நாட்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார். அவர் வேலூர் சிறையில் இருந்த போது அவரது உடல்நிலை சரியில்லாமல் இரண்டு முறை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறையில் அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதும் சுகாதாரமான உணவு வழங்கப்படாததுமே இதற்குக் காரணமாக சொல்லப்பட்டது.
இதையடுத்து அவர் மீதான வழக்குகளில் இருந்து ஜாமீன் பெறப்பட்டதை அடுத்து அவர் நேற்று ஜாமீனில் வெளிவந்தார். இதையடுத்து நேற்று இரவு அவர் மருத்துவமனையில் சோதனைக்காக சென்றார். அவரை பரிசோதித்த அவரது மருத்துவர்கள் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால் அவரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ளும்படி வலியுறுத்தினர்.
இதையடுத்து அவரது மருத்துவர் எழிலன் இன்று செய்தியாளர்களை சந்தித்து அவரது உடல்நிலை குறித்து பேசினார். அதில் ‘திருமுருகன் காந்தி செரிமானப் பிரச்சனை, நீர்ச்சத்து குறைபாடு, வயிற்றுப்போக்குப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவரை மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம். அவரது இந்த உடல் குறைபாடுகளுக்கு சரியான உணவு உட்கொள்ளாமையேக் காரணம்’ எனத் தெரிவித்துள்ளார்.