வேலை இல்லையே என்ன பண்ணலாம்? – யூட்யூப் பார்த்து திருட முயன்ற ஆசாமி!

வியாழன், 16 ஏப்ரல் 2020 (10:18 IST)
ஊரடங்கால் வேலை இழந்த நபர் யூட்யூபை பார்த்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியின் மையப்பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஏடிஎம்-இல் கடந்த 12ம் தேதி பணம் எடுக்க நபர் ஒருவர் வந்துள்ளார். யாரும் இல்லாத நேரம் பார்த்து ஏடிஎம்மை உடைக்க அவர் முயன்றபோது அலாரம் சத்தமிட்டதால் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஏடிஎம்மில் உள்ள சிசிடிவி கேமராவை கொண்டு மர்ம ஆசாமியை கண்டுபிடிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர் விழுப்புரம் மாவட்டம் ஆதிச்சனூரை சேர்ந்த பிரபு என்று தெரியவந்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள பேக்கரி ஒன்றில் பணியாற்றி வந்த பிரபு ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டதால் வேலை இழந்துள்ளார். வேலை இல்லாத காரணத்தால் பணம் திருட முடிவெடுத்த அவர் ஏடிஎம்மை திருடுவது குறித்து யூட்யூபில் வீடியோ பார்த்து முயற்சி செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்