திருப்பத்தூரையே திருப்பி போட்ட சிறுத்தை..! பள்ளிக்குள் முடங்கிய மாணவிகள்! – 10 மணி நேர போராட்டம்!

Prasanth Karthick

சனி, 15 ஜூன் 2024 (08:49 IST)
திருப்பத்தூரில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டுள்ளது.



திருப்பத்தூரில் சாம் நகர் பகுதியில் நேற்று பிற்பகல் வேளையில் சிறுத்தை ஒன்று நடமாடியதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் சிலர் உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளனர். அங்கு வந்த வனத்துறையினர் அது காட்டுப்பூனையாக இருக்கலாம் என அவர்கள் பதற்றம் அடையாமல் இருக்குமாறு கூறி வந்தனர்.

ஆனால் அங்கு உண்மையாகவே சிறுத்தை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக சிறுத்தையை பிடிக்க முயன்றபோது அது அங்கிருந்து தப்பி ஓடி கலெக்டர் அலுவலகத்தின் பின்புறமாக அமைந்திருந்த மேரி இமாக்குலேட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து அங்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த பெயிண்டர் கோபால் என்பவரை தாக்கிவிட்டு மறைவான இடத்தில் ஒளிந்து கொண்டது.

இதை கண்ட ஆசிரியர்கள் உடனடியாக மாணவிகளை வகுப்பறைக்குள் வைத்து பூட்டிக் கொண்டுள்ளனர். சிறுத்தை பள்ளிக்குள் புகுந்த சம்பவம் மக்களிடையே பரவியதால் அவர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து செல்ல பள்ளியருகே குவிந்து விட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி வளாகத்திற்குள் வனத்துறையினர் தேடி வந்தபோது சிறுத்தை 10 அடி உயர சுவரைத்தாண்டி அருகில் இருந்த கார் ஷெட் ஒன்றிற்குள் நுழைந்தது.

சிறுத்தை வெளியேறிவிட்டதை உறுதிப்படுத்திய வனத்துறையினர் பள்ளியில் சிக்கியிருந்த மாணவிகளை வெளியேற்றி பத்திரமாக பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர் அதை காட்டில் கொண்டு சென்று விட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று முழுவதும் திருப்பத்தூர் மக்கள் பீதியில் ஆழ்ந்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்