இதற்காகத்தான் தொப்பி சின்னம் - தம்பிதுரை புதிய விளக்கம்

வியாழன், 23 மார்ச் 2017 (16:02 IST)
அதிமுக பொதுச்செயலாளர் தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது பற்றி துணை சபாநாயகர் தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
தினகரன் மற்றும் ஓ.பி.எஸ் ஆணி ஆகிய இருவரும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதற்கும் ஒரு படி மேலே போய், அதிமுக என்ற பெயரையே யாரும் பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
இது ஓ.பி.எஸ் மற்றும் தினகரன் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின் ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு இரட்டை மின்கம்பமும், தினகரனுக்கு ஆட்டோ சின்னமும் ஒதுக்கப்பட்டது. ஆனால், ஆட்டோ சின்னம்  தங்களுக்கு வேண்டாம் எனக்கூறிய தினகரன் தரப்பு, அதற்கு பதிலாக தொப்பி சின்னத்தை கேட்டுப் பெற்றது. தற்போது தொப்பி சின்னத்திலேயே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டியிடுகிறார்.
 
இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து  தெரிவித்துள்ள தம்பிதுரை “ தேர்தல் ஆணையத்தின் முடிவில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. ஆனாலும், அதன் தீர்ப்பை மதிக்கிறோம். இது நிரந்தரம் கிடையாது. இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம். இது போன்ற பல சோதனைகளை அதிமுக சந்தித்துள்ளது. ஆனால், அதையும் தாண்டி வெற்றி நடை போட்டுள்ளது. ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெறுவார். 
 
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பல திரைப்படங்களில் தொப்பி அணிந்து பாட்டு பாடி நடித்துள்ளார். எனவே, அந்த சின்னம் மக்களிடையே பிரபலமான ஒன்றுதான். எனவேதான். அந்த சின்னத்தை கேட்டுப் பெற்றுள்ளோம்” எனக் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்