சிற்றன்னை சசிகலா: குற்றவாளிக்கு சட்டசபையில் புகழாரம்!

செவ்வாய், 4 ஜூலை 2017 (14:42 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சிற்றன்னை என தமிழக சட்டசபையில் புகழ் பாடியுள்ளார் ஆண்டிப்பட்டித் தொகுதி அதிமுக எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன்.


 
 
அதிமுகவில் ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி, தினகரன் அணி என மூன்று அணிகள் தற்போது உள்ளன. இதில் உள்ளவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போது தங்கள் ஆதரவு தலைவரை புகழ்ந்து வருகின்றனர். இதில் ஆண்டிப்பட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தினகரன், சசிகலா ஆதரவு அணியில் உள்ளார்.
 
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஆரம்பம் முதலே சசிகலா மற்றும் தினகரனின் தீவிர ஆதரவாளராக உள்ளார் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுகவில் சசிகலா மற்றும் தினகரனுக்கு எதிராக யாராது கருத்து சொன்னால் அவர்களை கடுமையாக எதிர்த்து விமர்சனம் செய்யும் முதல் ஆள் தங்க தமிழ்ச்செல்வனாக தான் இருப்பார்.
 
இந்நிலையில் இன்று தமிழக சட்டசபையில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன் சசிகலா மற்றும் தினகரனை புகழ்ந்து பேசியுள்ளார். முன்னதாக ஓபிஎஸ் முதல்வராக இருந்த போதே சசிகலாவை அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் புகழ்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
 
ஆனால் தற்போது சசிகலா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்கைதியாக உள்ளார். இந்நிலையில் சசிகலாவை சிற்றன்னை என மான்புமிகு தமிழக சட்டசபையில் புகழ்ந்துள்ளார் தங்க தமிழ்ச்செல்வன். மேலும் கூவத்தூர் ஒற்றுமையால் இந்த ஆட்சி தொடர்ந்து நீடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்