தினகரன் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் எஸ்கேப்பாகிய தம்பிதுரை!

திங்கள், 5 ஜூன் 2017 (12:42 IST)
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி 36 நாட்கள் திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த தினகரன் அளித்த பேட்டிக்கு பின்னர் அதிமுகவில் சலசலப்பு அதிகரித்துள்ளது.


 
 
ஜாமீனில் வெளியே வந்த தினகரன் தன்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை எனவும், மீண்டும் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட உள்ளதாகவும் தினகரன் கூறினார். இதற்கு அதிமுக அம்மா அணியிலேயே ஆதரவும் எதிர்ப்பும் நிலவி வருகிறது.
 
இந்நிலையில் கரூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தினகரன் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் உடனடியாக அந்த இடத்தில் இருந்து கிளம்பிவிட்டார்.
 
செய்தியாளர்கள் தம்பிதுரையிடம் அதிமுக. அம்மா அணி தினகரன் தலைமையில் வழி நடத்தப்படுமா? என கேள்வி எழுப்பினர். அதிமுகவை ஒன்றாக இணைத்து செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடு இருப்பது வழக்கம். பிளவு படாத அதிமுகவில் சிலர் சில கருத்துக்களை கூறி வருகின்றனர். கருத்து வேறுபாடுகளை களைந்து நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றார்.
 
தொடர்ந்து அவரிடம் தினகரன் கட்சியில் துணைப் பொதுச்செயலாளராக நீடிக்கிறாரா? இல்லையா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளிக்காமல் தம்பிதுரை உடனடியாக அந்த இடத்தில் இருந்து புறப்பட முயற்சித்தார். அடுததாக தினகரனை சந்தித்து பேச வாய்ப்பு உண்டா? என கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அதற்கும் பதில் அளிக்காமல் தம்பிதுரை புறப்பட்டு சென்றுவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்