சுவாதி கொலை வழக்கில் தீவிரவாத இயக்கங்களுக்கு தொடர்பு?: மீண்டும் கிளம்பும் சர்ச்சை!
வெள்ளி, 26 மே 2017 (09:18 IST)
கடந்த வருடம் ஜூன் 26-ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த கொலை வழக்கில் தீவிரவாத இயக்கங்களுக்கு தொடர்பு இருக்கலாம் என ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் தற்போது சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
மென்பொறியாளரான சுவாதி கொலை செய்யப்பட்டது தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த கொலைக்கான காரணம், அதை யார் செய்தது போன்றவை இன்று வரை மர்மமாகவே உள்ளது. ஆனால் இந்த கொலையை செய்தது நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் தான் என போலீசார் கைது செய்தனர்.
மிகவும் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருந்த இந்த வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்ட போது அவர் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. அதன் பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் செப்டம்பர் 18-ஆம் தேதி ராம்குமார் சிறையிலேயே மின்கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை கூறியது. அதன் பின்னர் பரபரப்பாக சென்ற இந்த வழக்கு தற்போது அமைதியாக தூங்குகிறது.
இந்நிலையில் ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ் மீண்டும் இந்த வழக்கு குறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசினார். ராம்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையை இன்னமும் தராமல் இழுத்தடிப்பதாக குற்றம் சாட்டிய அவர் ராம்குமாரின் பெற்றோர்கள் இது தொடர்பாக புகார் அளிக்க உள்ளதாக கூறினார்.
மேலும் சுவாதி கொலை வழக்கின் பின்னணியில் பல மர்மங்கள் புதைந்து கிடப்பதாகவும், அவரின் கொலையில் தீவிரவாத இயக்கங்களுக்குத் தொடர்பு இருக்கக் கூடும் என்கிற சந்தேகமும் உள்ளதாகவும் தெரிவித்தார். எனவே இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.