மகாராஷ்டிரம், குஜராத், ஆந்திரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் மழையின் காரணமாக உற்பத்தி குறைந்தது.வெளிமாநிலங்களில் இருந்து வெங்காய வரத்துக் குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் வெங்காய விலை அதிகமாகி வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக ரூ 60 வரை விற்கப்பட்டு வருகிறது. விரைவில் விலை ரூ.100 தொடும் என்ற அச்சம் எழுந்ததுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினர். கூட்டத்துக்குப் பின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘பெரிய வெங்காயம் கிலோ ஒன்றுக்கு ரூ.45 முதல் ரூ.46 வரை பண்ணை பசுமை கடைகளில் விற்கப்படுவதாகவும், தனியார் கடைகளில் ரூ.55 முதல் ரூ.60 அளவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அதிகமான விலைக்கு விற்கப்படுவதில்லை எனவும், செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் தெரிவித்தனர். மகாராஷ்டிரம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கன மழை பெய்வதால், வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால் அதன் விலை அதிகரித்துள்ளது.
தற்போது நாசிக் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய 2 இடங்களிலிருந்து வெங்காயம் கோயம்பேட்டிற்கு வரவுள்ளது, இதனால் அடுத்த மூன்று நாட்களில் வெங்காயத்தின் விலை குறையும். வெங்காய விலை உயர்வு தொடர்பான நகர்வுகளை அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. எங்கும் பதுக்கல் இல்லாமல் மக்களுக்குச் சிரமமின்றி வெங்காயம் விநியோகம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெங்காயத்தின் விலை உயர்ந்தால் நுகர்வோருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசே வெங்காயத்தைக் கொள்முதல் செய்து நுகர்வோர் பாதுகாப்பு கடை மூலமாக விற்பனை செய்யும்’ என அறிவித்துள்ளது.