கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ஏப்ரல் மாத ரேசன் பொருட்களை இலவசமாக வழங்கியது தமிழக அரசு. இந்நிலையில் தற்போது மே 3 வரை இரண்டாம் கட்டமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மே மாதங்களில் வேலைக்கு சென்று பிறகு ரேசன் பொருட்களை வாங்க சிரமப்படுவார்கள் என்பதால் மே மாத பொருட்களையும் இலவசமாக வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மே மாத பொருட்களை பெற்று கொள்வதற்கான டோக்கன் ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வீடுகளுக்கே வந்து வழங்கப்படும். அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்திற்கு சென்று மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த இலவச அத்தியாவசிய பொருட்களில் ரூ.500க்கு ரேசன் கடைகளில் அளிக்கப்படும் மலிவு விலை மளிகை பொருட்கள் தொகுப்பு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.