இனிமே 24 மணி நேரமும் தமிழ்நாடே தூங்காது – அரசின் புதிய அறிவிப்பு

வியாழன், 6 ஜூன் 2019 (19:29 IST)
தமிழ்நாட்டில் இனிமேல் கடைகள், தியேட்டர்கள், உணவகங்கள் என சகலமும் விருப்பப்பட்டால் 24 மணி நேரமும் செயல்படலாம் என தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தொழில்துறை நிறுவனங்கள், திரையரங்கங்கள், உணவகங்கள், மருந்தகங்கள் போன்ற அனைத்து வர்த்தகம்சார் நிறுவனங்களும் 24 மணி நேரமும் செயல்படலாம் என அனுமதி வழங்கியிருக்கிறது.

மேலும், அந்த நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களை அதற்காக அதிக நேரம் வேலை வாங்க கூடாதென்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. ’ஒருநாளைக்கு ஒரு ஊழியரை 8 மணி நேரத்திற்கும் மேல் வேலை வாங்க கூடாது. ஷிஃப்ட் கணக்குப்படி 8 மணி நேரத்திற்கொருமுறை வேலையாட்களை மாற்றி கொள்ள வேண்டும்’ என்ற நிபந்தனையையும் விதித்துள்ளது. மேலும் ’பெண்களை இரவு 8 மணிக்கும் மேல் வேலை வாங்க கூடாது. அப்படி அவர்கள் வேலை பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் எழுத்துபூர்வமாக ஒப்புதல் வாங்கிய பிறகே அவர்களை 8 மணிக்கு மேல் பணியில் ஈடுபடுத்த வேண்டும். இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை பணியில் இருக்கும் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பை சம்பந்தபட்ட நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்’ என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றமானது இந்த மூன்று வருடங்களுக்கு செயல்பாட்டில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்