வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு! – சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்!

வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (16:06 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்க சில மணி நேரங்களே உள்ள நிலையில் வன்னியர் சமுதாயத்திற்கு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பட்ஜெட் மீதான இரண்டாவது நாள் விவாத கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட முடியாது என்பதால் சில அறிவிப்புகள் இன்றே உடனடியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் எதிர்பார்க்கப்பட்டது போல வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் சீர்மரபினருக்கு 7% ஒதுக்கீடு வழங்கவும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டில் குறிப்பிட்ட அளவு உள் ஒதுக்கீடு வழங்க புதிய பிரிவு ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த மசோதாக்கள் தற்காலிகமானவை என்றும், சாதி ரீதியான கணக்கெடுப்பு பணிகளுக்கு பிறகு 6 மாதம் கழித்து மசோதாவில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்