இன்னும் இருக்கு... எண்ட் கார்டு போடாமல் தொடரும் மழை!

சனி, 5 டிசம்பர் 2020 (08:12 IST)
அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பருவமழை, நிவர் புயல் தற்போது புரெவி புயல் ஆகியவற்றால் தமிழகத்திற்கு அதிக மழை பொழிந்து வருகிறது. தொடர்ந்து இரண்டு புயல்கள் வரிசைக்கட்டி வந்து அதிகப்படியான மழையை பொழிந்துவிட்டது. அதோடு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைதுள்ளதாகவும் இதனால் தமிழகத்திற்கு இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என நேற்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 
 
இந்நிலையில் இன்று, மன்னார் வளைகுடா பகுதியில் நிலைக்கொண்டு இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து இருக்கிறது. இது மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து 5-ந்தேதி (இன்று) காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலு இழக்கிறது. 
 
அதன்பின்னர், மேற்கு-தென்மேற்கு திசையில் நகர தொடங்கி, தெற்கு கேரள பகுதியை நோக்கி செல்லக்கூடும் என்று தற்போது கணிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருவள்ளூர், காஞ்சீபுரம், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும் பெய்யக்கூடும்.
 
தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) மிதமான மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்