தமிழக காவல்துறைக்கு தொல்.திருமாவளவன் கடும் கண்டனம்

வெள்ளி, 8 ஜனவரி 2016 (01:53 IST)
மயிலாடுதுறை அருகே தலித் முதியவர் பிரேதத்தை கொண்டு செல்லும் விவகாரத்தில் தமிழக காவல்துறைக்கு தொல்.திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வழுர் என்னும் கிராமத்தையொட்டி அமைந்துள்ள திருநாள்கொண்டசேரி என்னும் குக்கிராமத்தில் தலித் வகுப்பை சார்ந்த செல்லமுத்து காலமானார்.
 
அவரது உடலை வழுர் கிராமத்தின் பொதுசாலை வழியாக இடுகாட்டிற்கு எடுத்து செல்லவிடாமல் சாதியவாத சக்திகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த நான்கு நாட்களாக செல்லமுத்துவின் உடலை அடக்கம் செய்யவில்லை.
 
பொதுசாலைவழியாக அவரது உடலை எடுத்து செல்வதற்கு போதிய பாதுகாப்பு அளிக்கவேண்டுமென உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் சாதிவெறியர்கள் பொதுசாலை வழியே எடுத்துசெல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
வழுர் கிராமத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான சாதிவெறியர்களைத் திரட்டிவந்து தலித் மக்களின் குடியுருப்புக்குள் புகுந்து தாக்குவதற்கு முயற்சித்துள்ளனர்.
 
காவல்துறையினர், சட்டவிரோதமாக கூடியவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கோ, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைபடுத்துவதற்கோ சிறிதும் முனைப்புக் காட்டவில்லை.
 
மாறாக, தலித் மக்களை அச்சுறுத்தி கொல்லைப்புற வழியாக எடுத்து செல்லும்படி வற்புறுத்தினர். உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பொதுசாலை வழியாக உடலை எடுத்து செல்லுவதற்கு பாதுகாப்பு வழங்குங்கள் என்று இறந்த செல்லமுத்துவின் உறவினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.  ஆனால், காவல்துறையினர் நயவஞ்சகமாக பிணத்தை  பொதுசாலை வழியாக  எடுத்துசெல்லலாம் எனக் கூறி தலித்துகளை நம்பவைத்து நான்கு நாட்களாக கிடந்த உடலை எடுக்க வைத்தனர்.
 
ஆனால், சிறுது தூரம் சென்றதும் திடீரென தலித்துகளின் மீது தடியடி நடத்தி பெண்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டவர்களைக் கைதுசெய்ததுடன் பிணத்தைக் கைப்பற்றி கொல்லைப்புற வழியாக எடுத்து சென்று காவல்துறையினரே அடக்கம் செய்துள்ளனர். தடியடி நடத்தியதில் ஆறு பெண்கள் உட்பட எராளமானவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
 
காவல்துறையினரின் இந்த நடவடிக்கை மிகவும் வெட்கக்கேடாக உள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும் சட்டவிரோதமாக கூடிய சாதிவெறியர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தவும் துணிவில்லாமல், அப்பாவித் தலித் மக்களையே தாக்கி அவர்களைக் கைது செய்தும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதித்தும், மிகவும் கேவலமான ஒரு நடவடிக்கையை, குறிப்பாக காவல்துறை ஈடுபட்டு இருப்பதை விடுதலைச் சிறுத்தைகள்  மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.
 
பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட அப்பாவி தலித்துகளை உடனே  விடுதலைச் செய்யவேண்டுமெனவும், உயர்நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட அதிகாரிகள் மீது வன்கொடுமைகள் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது என கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்