அதிக தினசரி பாதிப்பு... டாப் 3-ல் இடம் பிடித்த தமிழகம்!

செவ்வாய், 11 மே 2021 (17:37 IST)
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம், ஒடிசா, பஞ்சாப் மற்றும் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3,29,942 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,29,92,517 ஆக உயர்ந்துள்ளது.
 
ஒரே நாளில் 3,876 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  2,49,992 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,90,27,304 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 37,15,221 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதும் 17,27,10,066 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், தினசரி கொரோனா பாதிப்பில் கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக தமிழகம் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும் ஆனால், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம், ஒடிசா, பஞ்சாப் மற்றும் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்