உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

Mahendran

வியாழன், 27 மார்ச் 2025 (10:20 IST)
வெறுப்புணர்வு பற்றி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த சிறப்பு நேர்க்காணலில், நாட்டில் நிலவும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.

அப்போது, ஹிந்தி எதிர்ப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த யோகி ஆதித்யநாத், “வாக்கு வங்கி குறைந்துவிட்டதாக உணர்ந்ததால், முதல்வர் ஸ்டாலின் மொழி அடிப்படையிலான பிளவுகளை உருவாக்க முயற்சிக்கிறார். மொழி அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்த கூடாது. காசி - தமிழ் சங்கமத்தை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். சமஸ்கிருதத்தைப் போல தமிழின் வரலாறும் பழமையானது. இந்திய பாரம்பரியத்தின் கூறுகள் தமிழில் இருப்பதால், ஒவ்வொரு இந்தியருக்கும் தமிழ் மீது மரியாதை உண்டு. பிறகு ஏன் ஹிந்தியை வெறுக்க வேண்டும்? மொழி ஒன்றிணைக்க மட்டுமே வேலை செய்யும், பிரிவினைக்கு அல்ல” என தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது: “இருமொழிக் கொள்கை மற்றும் நியாயமான தொகுதி மறுசீரமைப்பு குறித்த தமிழ்நாட்டின் உறுதியான குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. பாஜக தலைவர்கள் அதிர்ச்சியடைந்திருப்பது அவர்களின் நேர்க்காணல்களில் தெரிகிறது.

வெறுப்புணர்வு குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை. அவருடைய கருத்து முரண்பாடல்ல, அரசியலின் பிளாக் காமெடி.

நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை, திணிப்பு மற்றும் ஆதிக்கத்தை மட்டுமே எதிர்க்கிறோம். நாங்கள் செய்வது வாக்கு வங்கிக்கான கலவர அரசியல் அல்ல, கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்