கோடம்பாக்கத்து குரல் இது... கோட்டை ஆட்களை பெடல் எடுக்கும் டி.ஆர்!!
திங்கள், 7 செப்டம்பர் 2020 (16:29 IST)
தமிழக திரையுலகிற்கு விதித்துள்ள கேளிக்கை வரியை ரத்து செய்யகோரி இயக்குனர் டி.ராஜேந்தர் அரசை கோரியுள்ளார்.
திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர், இது என் தனிப்பட்ட கருத்து என தமிழக திரையுலகிற்கு விதித்துள்ள கேளிக்கை கேளிக்கை வரி குறித்து குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ஒரு திரைப்படம் பார்க்க ஒரு ரசிகன் 100 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தால் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டியதாக இருக்கிறது 12% GST வரி. அதை விட கூடுதலாக தமிழக அரசுக்கு செலுத்த வேண்டியதாக இருக்கிறது 8% கேளிக்கை (LBT) வரி.
மத்திய அரசு போட்டுவிட்டது GST வரி, பின்பு ஏன் மாநில அரசு போடுகிறது கூடுதல் வரி? பெரும்பாலும் இந்தியாவில் உள்ள எந்த பிற மாநிலங்களிலும் போடவில்லை வரி. மத்திய அரசு சொல்வது ஒரே நாடு ஒரே வரி, ஆனால் இந்த தமிழ் நாடு மாநிலத்தில் மட்டும் ஏன் இரட்டை வரி? இந்தியாவில் தமிழ் நாடு என்ன தனி தீவா? எங்கள் திரையுலகை கொடுக்கிறார்களா காவா?
இதே கோடம்பாக்கத்திலுருந்து வந்து தமிழகத்தை 5 முறை ஆண்ட முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழக திரையுலகிற்கு கேளிக்கை வரியை செய்தார் ரத்து. அதே போல் கோடம்பாக்கத்திலுருந்து வந்து தமிழகத்தை 3 முறை ஆண்ட முன்னாள் முதல்வர் அம்மா அவர்களும் தமிழக அரசின் மூலமாக தமிழக திரையுலகிற்கு கேளிக்கை வரியை செய்தார் ரத்து.
மக்களுடைய நம்பிக்கை பெற்ற அந்த அம்மா அவர்கள் அமைத்து தந்த ஆட்சி, அதைதான் தற்போது வழிநடத்தி வருகிறார்கள். பேச்சுக்கு பேச்சு மூச்சுக்கு மூச்சு அம்மா அரசு என்று சொல்கிறீர்களே, அம்மா போடாத கேளிக்கை வரியை ஏன் தமிழக திரையுலகின் மீது திணிக்கிறீர்கள்?
சாதா காலங்களிலேயே சினிமா பெரும் பாடு படுகிறது, மேலும் இந்த கொரோனா காலத்தில் பெரும் பிரச்சனை. திரையரங்குகளை திறப்பதாக இருந்தால் 8% கேளிக்கை வரியை நீக்கிவிடுங்கள்.
எங்களால் இந்த இடர்களை தாங்க முடியவில்லை. உங்களது ஆட்சி காலம் முடிய போகிறது, எப்போது எங்கள் தமிழ் திரையுலகிற்கு பொழுது விடிய போகிறது?. பொறுக்க முடியாது இனி, பூனைக்கு யாராவது கட்டியே தீர வேண்டும் மணி!
இது கோடம்பாக்கத்து தாக்கத்தின் குரல், கோட்டையில் இருப்பவர்கள் இதை சாதாரணமாக போட வேண்டாம் எடை. இந்த வேதனைக்கெல்லாம் விரைவில் காலம் கூறும் விடை என குறிப்பிட்டுள்ளார்.