மிரட்டலுக்கு அஞ்சுபவருக்கு நாடாள ஆசை எதற்கு? : ஓ.பி.எஸ்-ஐ விளாசிய டி.ஆர்

சனி, 4 மார்ச் 2017 (13:15 IST)
சசிகலா தரப்பு தன்னை மிரட்டி, தன்னிடமிருந்து ராஜினாமா கடிதத்தை வாங்கியதாக கூறிய தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை, நடிகரும் ல.தி.மு.க தலைவருமன டி.ராஜேந்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.


 

 
முதல்வராக இருந்த தன்னிடமிருந்து சசிகலா தரப்பு, ராஜினாமா கடிதத்தை மிரட்டி வாங்கியதாக ஓ.பி.எஸ் அளித்த பேட்டி தமிழக அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அதிமுக 2ஆக உடைந்தது போல் ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதன்பின் அவர் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறி வருகிறார்.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.ராஜேந்தர் “ இத்தனை நாட்கள் கழித்து ஜெ.வின் மரணம் குறித்து மர்மம் எழுப்பும் ஓ.பி.எஸ், இவ்வளவு நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தார்?. அவருக்கு உண்மையிலேயே ஜெ.வின் மீது அக்கறை இருந்தால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த போதே பேசியிருக்க வேண்டும். அல்லது, ஜெ. இறந்தவுடன் பேசியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு முதல்வர் பதவியை 2 மாதம் அனுபவித்து விட்டு, தற்போது பேசுவது ஏன்?

ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செப்.22ம் தேதி முதல், ஓ.பி.எஸ் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்து வரை, இடைப்பட்ட அந்த 137 நாட்கள் என்ன நடந்தது என்பதுதான் என் கேள்வி.
 
சசிகலா தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்ததாக சொல்கிறார் ஓ.பி.எஸ். மிரட்டலுக்கு சாதாரன குடிமகன் பயப்படலாம். ஆனால், ஒரு முதலமைச்சர் பயப்படலாமா? அப்படி பயப்படுபவர், எப்படி அதிமுகவின் தலைமையை ஏற்க விரும்புகிறார்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்