’சுவாதி கொலை மதம் மாறி காதலித்ததால் நடந்தது’ - திருமாவளவன்

திங்கள், 18 ஜூலை 2016 (23:02 IST)
சுவாதி கொலைக்கு ஒருதலை காதல் காரணம் அல்ல. மதம் விட்டு மதம் மாறி காதலித்ததால் இந்த கொலை நடந்துள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 

 
தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக பண்ருட்டி காவல் துறையினர் தொடர்ந்த வழக்கில் பண்ருட்டி 1-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அப்போது பேசிய திருமவளவன், ’’சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலைக்கு ஒருதலை காதல் காரணம் அல்ல. மதம் விட்டு மதம் மாறி காதலித்ததால் இந்த கொலை நடந்துள்ளது. இது ஆணவகொலை.
 
ராம்குமார் பேஸ்புக்கில் சுவாதியை ஒருதலையாக காதலித்ததாக எந்த தகவலும் இல்லை. போலீசாரின் விசாரணையில் முரண்பாடு உள்ளது. கொலை வழக்கில் பின்னணியில் உள்ள உண்மைகளை போலீசார் மூடி மறைக்கின்றனர். தமிழக போலீசார் விசாரித்தால் உண்மை வெளிவராது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
 
இந்த கொலை தொடர்பாக பிலால் மாலிக்கையும் விசாரணை நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காவல் துறை செயலிழந்து உள்ளது. பெரும்பாலான நேரங்களில் ஆளுங்கட்சிக்கு சேவகம் செய்வதற்கே காவல்துறையினருக்கு நேரம் சரியாக உள்ளது" என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்