எல்லா பொண்ணுக்கும் இருக்கிற உடம்புதான் எனக்கும் இருக்குனு சொல்லு: சூர்யாவின் நீண்ட அறிக்கை

வியாழன், 14 மார்ச் 2019 (09:00 IST)
பொள்ளாச்சி விவகாரம் குறித்து தமிழகமே கொந்தளித்து வரும் நிலையில் திரையுலகினர்களும் இந்த விவகாரத்தில் ஆவேசமாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
 
என்னுடைய மகளையும், மகனையும் நான் ஒரேவிதமாக வளர்க்கிறேனா என்ற கேள்வி அடிக்கடி நெருடலாக எனக்குள் வந்து போவதுண்டு. ஆண் குழந்தையின் உடல் மீது எனக்கு எவ்விதமான கற்பிதங்களோ, ஒழுக்க வரையறைகளோ இருப்பதே இல்லை. ஆனால், பெண் குழந்தையின் உடல் குறித்து, என்னையறியாமலேயே நிறைய விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் திணித்துக்கொண்டே இருக்கிறேன். ‘நீ எப்படி உடுத்த வேண்டும், நீ எப்படி உட்கார வேண்டும், மற்றவர்கள் பார்வைக்கு உன்னை எப்படி வெளிப்படுத்த வேண்டும்’ என்பதுபற்றி, சமூகம் எனக்குக் கற்றுக் கொடுத்த வரைமுறைகளை அறிவுரையாக சொல்லிக்கொண்டே இருக்கிறேன். ’துணிவு மிக்க பெண்ணாக’ மகளை வளர்க்க வேண்டும் என்கிற எண்ணத்திற்கும், என் செயலுக்கும் இடைவெளி இருப்பதை என்னாலேயே உணர முடிகிறது.
 
குழந்தைப்பேறு காலத்தில், மனைவியுடன் மருத்துவமனை செல்லும்போதெல்லாம் ஒரு வாசகம் மனதை நெருடும். ‘தாயின் கருவில் இருக்கிற குழந்தை, ஆணா, பெண்ணா என்று ஸ்கேன் செய்து பார்ப்பது சட்டப்படி குற்றம்’ என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும். படித்தவர்களும், பணக்காரர்களும் வந்துபோகிற மருத்துவமனையில்கூட இப்படி எழுதிப்போட வேண்டிய அவலத்தில் வாழ்கிறோமே என்று வெட்கமாக இருந்தது. பெண் வெறுப்பிலும், எதிர்ப்பிலும் இங்கே படித்தவர்கள், பாமரர்கள்; ஏழைகள், பணக்காரர்கள் என்கிற எந்த வேறுபாடும் இல்லை.
 
இது ஆண்களுக்கான உலகம்; இங்கே பெண்களுக்கு இடமே இல்லை என்று அர்த்தமல்ல. ஆனால், ‘கற்பு, ஒழுக்கம், கலாச்சாரம், குடும்பக் கௌரவம், சாதிப்பெருமை, மதக் கட்டுப்பாடு’ என நிறைய ‘ஆண் பெருமை’களைக் கட்டிக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் இங்கு இருக்கிறது. அந்தப் பொறுப்பை நிறைவேற்றியபடியே, ஆண்களின் ‘கருணை’யில் அவர்களின் வசதிக்கேற்ப, தேவைகளைப் பூர்த்திசெய்து, மனம் கோணாமல் பெண்கள் இவ்வுலகில் இருந்துகொள்ளலாம்.
 
சிரித்த முகத்துடன், உடையில்லாமல் நிற்கிற ஒரு வயது பெண் குழந்தையிடம், நம்முடைய ‘மானப் பிரச்சனை’யை நேரடியாகவும், மறைமுகமாகவும் பிரசாரம்செய்ய தொடங்குவதில் ஆரம்பிக்கிறது நம்முடைய வன்முறை. இதிகாசமாக, வரலாறாக, பண்பாடாக, வீரமாக நாம் கொண்டாடுகிற அனைத்திலும் பெண் உடலுக்கு எதிரான அந்தக் கருத்தியல் வன்முறை நிரம்பி வழிகிறது. கடவுளின் அவதாரமாகவே இருந்தாலும், நெருப்பில் இறங்கித்தானே இங்கே ‘கற்பை’ நிரூபித்து அவள் மீண்டு வர வேண்டும்! ‘என் மனைவியின் ஒழுக்கத்தை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.அவள் நலமுடன் இருப்பதே எனக்கு மகிழ்ச்சி. கற்பாவது, வெங்காயமாது’ என்று சொல்லும் தைரியம் இங்கே நம்முடைய கடவுளுக்கேகூட இல்லையே!
 
சில வருடங்களுக்கு முன்பு, சேலத்தில் ஒரு பெண்ணின் அந்தரங்கப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுகிறான் அவளுடைய முன்னாள் காதலன். அந்தப் பெண் தன் வீட்டில் உண்மையைச் சொல்கிறாள். ‘குடும்ப மானத்தைக் கெடுத்துட்டியே’ என்று அடித்துத் துன்புறுத்துகிறார்கள். அந்த புகைப்படங்கள் மேலும் இணையத்தில் பரவிவிடக் கூடாது என்று புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றால், ‘இப்படி பொண்ணை பெத்து ஊர் மேய விட்டுட்டு, இப்ப வந்து நில்லுங்க’ என்று பெற்றோரையே வசை பாடுகிறார் காவல் அதிகாரி. இந்த அவமானத்தையெல்லாம் மீண்டும் அந்தப் பெண்ணின் மீது கொட்டுகின்றனர் பெற்றோர். கொடுமை தாள முடியாமல் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டாள். உடலை படம் பிடித்து மிரட்டியவனைகூடப் போராடி எதிர்கொண்ட அந்தப் பெண்ணால், தன் நிலையுணர்ந்து துணை நிற்க வேண்டிய குடும்பமும், சமூகமும் எதிராக திரும்பும்போது போராட முடியவில்லை; உயிரை மாய்த்துக்கொண்டாள்.
 
தன்னை காதலிக்கும் ஒருத்தனை நம்பாமல், ஒரு பெண் வேறு யாரை நம்புவாள்? பெண்களின் நம்பிக்கையை உடைக்கிற ஆண்கள் உயிரோடு வலம் வருகிறார்கள். ஆனால், ‘மானம் காக்கும் வீரர்கள்’ குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு முன்பு, பாதிக்கப்பட்ட பெண்களையே தண்டிக்கிறார்கள். பாதிப்புக்கு ஆளான பெண்களுக்கு, இந்தச் சமூகத்தில் தொடர்ந்து வாழ்கிற தண்டனையைவிட, தற்கொலை என்கிற தவறான முடிவு எளிய தீர்வாக இருக்கிறது என்றால் அதற்காக நாம் வெட்கப்பட வேண்டாமா?
 
சமீபத்தில் வெளியான, பாலியல் தொந்தரவுக்கு ஆளான ஒரு சிறுமியின் தந்தை எழுதிய கட்டுரையைப் படித்தபோது நெஞ்சை உலுக்கியது. தன் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரின் மீது புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றபோது, ’செக்ஸ் கம்ளைண்ட் குடுத்தது யாரு?’ என்று பலரின் முன்னிலையில் குரல் உயர்த்தி கேட்கின்றனர் காவலர்கள். இரவு பதினொரு மணிக்கு குழந்தையை அழைத்துக்கொண்டு நீதிபதி வீட்டிற்குப் போகிறார்கள். அவர் தூங்கிக் கொண்டிருக்க, நான்கு மணிநேரம் அந்த நள்ளிரவில் காத்திருகிறது அந்தக் குழந்தை. அதற்குப் பிறகு மருத்துவ பரிசோதனைக்கு போனால் அங்கும், ‘ஒரு குழந்தையைக் கையாளுகிறோம்’ என்ற உணர்வே இல்லாமல் மருத்துவமனை ஊழியர்கள் நடந்துகொள்கின்றனர். ‘அந்த நபர், வேறொரு குழந்தைக்கு பாலியல் தொந்தரவு தந்துவிடக்கூடாது’ என்ற நோக்கத்திற்காக புகார் கொடுக்க சென்றவரை சட்டமும், சமூகமும் நடத்திய விதம் ஒரு சோறு பதம்.
 
இதோ ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துகிறது பொள்ளாச்சி சம்பவம். கொடூரமான பாலியல் கொடுமைக்கு ஆளான பெண் துணிந்து புகார் அளிக்கிறார். ஆனால், அந்தப் பெண்ணைப் பற்றிய எல்லா விவரங்களும் காவல் துறையின் மூலமாகவே வெளியானதும், அந்தக் குடும்பம் மிரட்டப்பட்டதும் நம்முடைய அலட்சியத்தையும் அமைப்புகளின் சரிவுகளையும் தோலுரிக்கிறது. இந்த நிகழ்வை ஒட்டி, பொதுவாக இரண்டுவிதமான எதிர்வினைகள் வருகின்றன. ’பெண்களே இதைப் பார்த்தாவது திருந்துங்கள். அறிமுகம் இல்லாத ஆண்களை நம்பாதீர்கள்’ என்று அன்போடு அறிவுரை சொல்கிறது ஒரு கூட்டம். ‘ஊசி இடம்கொடுக்காமல் நூல் நுழையுமா?’ என்று இந்த நேரத்திலும் பெண் வெறுப்புப் பிரச்சாரம் செய்கிறது இன்னொரு கூட்டம். பெண்கள் மீதான இத்தகைய ‘அன்பு’, ‘வெறுப்பு’ இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான். ‘ஆண்கள் அப்படிதான் இருப்பார்கள். நீங்கள் அடங்கி ஒடுங்கி இருங்கள்’ என்பதே அது.
 
அறிமுகம் இல்லாத எந்த ஆணையும் நம்பாதே என்று பெண்களுக்கு சொல்கிற நாம், ஏன் ‘பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்’ என்று ஆண்களுக்குச் சொல்லத் தவறுகிறோம்? ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்று வீட்டின் முன்னே எச்சரிகை வாசகம் இருப்பதைப் போல, ஒவ்வொரு பெண்ணும், ‘ஆண்கள் ஜாக்கிரதை’ என்ற வாசகத்தை மனதில் ஒரு எச்சரிக்கைப் பலகையை மாட்டிக்கொண்டு அலைய வேண்டுமா?
 
பொள்ளாச்சி பாலியல் வன்முறைக் காட்சிப் பதிவுகளில் உள்ள பெண்களின் கதறல் நம் ஈரக்குலையை அறுக்கிறது. தனிப்பட்ட இச்சைக்காக மட்டும் அந்தக் கயவர்கள் இதைச் செய்யவில்லை. பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்து, மிரட்டி காரியங்களைச் சாதித்திருக்கிறார்கள். மறுத்த பெண்களை அடித்து, துன்புறுத்தியிருக்கிறார்கள். வசதியானவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக இதை ஒரு ‘தொழில்’ ஆகவே செய்துவரும் இவர்களைத் தொழில்முறைக் குற்றவாளிகளாகவே கருத வேண்டும்; கடுமையான தண்டனைக்குள்ளாக்க வேண்டும். அதேசமயம், இவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டதோடு பிரச்சினை முடிந்துவிடும் என்று நாம் நினைத்தால், அது அபத்தமானது.
 
பெண்ணின் உடலை வைத்து இந்தச் சமூகம் ஆடுகிற கேவலமான விளையாட்டின், சிறிய விளைவுதான் பொள்ளாச்சி சம்பவம். நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும், ஏன் எந்தப் பெண்ணும் முன்வந்து நம் சட்டத்திடமும், நீதியிடமும் பாதுகாப்பு கோரவில்லை? நம்பிக்கைக்குரிய ‘ஆண்கள்’ நிரம்பி இருக்கிற வீட்டிலும், தாங்கள் மிரட்டப்படுவதைச் சொல்லவிடாமல் அந்தப் பெண்களை எது தடுத்தது? அவர்களுக்கு நிகழ்ந்த அநீதியைவிட, அதை முறையிட்டு தீர்வு தேட முடியாத நம்முடைய கொடூரச் சூழல் மேலும் அபாயகரமானது இல்லையா? ‘என்னை இப்படி தலைகுனிய வெச்சிட்டீயே’ என்று ஓலமிடுகிற அன்பானவர்கள்தான், ‘ஆபாசத்தை வெளியே பரவ விடுவேன்’ என்ற குற்றவாளிகளின் மிரட்டலுக்கு பெண்கள் பலியாக முக்கியமான காரணமாகிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
 
ஒருவகையில் நிகழ்ந்திருக்கும் குற்றத்தில் நமக்கும் முக்கியமான பங்கிருக்கிறது. ‘யார் உன்னை மிரட்டுகிறானோ, அவனைப் பொதுவெளியில் நிறுத்தி அசிங்கப்படுத்து. சிறைக்கு அனுப்பு. நாங்கள் உன்னோடு இருக்கிறோம்’ என்று குடும்பம் சொன்னால், இந்த மிரட்டல் ஒருபோதும் பலிக்காது. சட்டத்தைவிட, நம் பெண்களுக்கு இந்தப் பாதுகாப்புணர்வுதான் பலம் கொடுக்கும்.
 
குடும்பத்தாலும், சமூகத்தாலும் தன் உடலை வைத்தே பலவீனமாக வளர்க்கப்படுகிறாள் பெண். சமூக விரோதிகள் அதை பயன்படுத்திக்கொள்கிறார்கள். பிரச்சினையின் வேர் நம்மிடம்தான் இருக்கிறது. சிக்கிவிட்ட நான்கு குற்றவாளிகளின் மீது கல்லெறிந்துவிட்டு, பெண்களுக்கு எதிராக ஒட்டுமொத்த சமூகமாக நாம் நிகழ்த்துகிற குற்றங்களை மறைக்க முயற்சிக்கிறோம்.
 
கோவை மண்ணிலிருந்து படித்து முடித்து வெளியூரில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் முகநூல் பதிவு என்னை மிகவும் நெகிழச் செய்தது. “எவனாச்சும் உன் போட்டோ, வீடியோவ வெச்சி மிரட்டினா பயப்படாத. ‘என்ன வேணா பண்ணிக்கோடா. உலகத்துல இருக்கிற எல்லா பொண்ணுக்கும் இருக்கிற உடம்புதான் எனக்கும் இருக்குனு சொல்லு’ என்று தொலைபேசியில் கூறிய தன் அம்மாவை கட்டிப்பிடித்து அழ வேண்டுமென்று தோன்றியது” என்று அந்தப்பெண் எழுதியிருந்தார். ஒவ்வொரு பெண்ணுக்கும் இத்தகைய நம்பிக்கை நிறைந்த, பாதுகாப்பான இடமாக குடும்பங்கள் மாறாதவரை,இந்தக் குற்றங்கள் மீண்டும் மீண்டும் நடக்கும். இந்த மாற்றத்தின் முதல் முயற்சியாக, ‘பெண்ணின் வெற்றுடல் ஆபாசமானதல்ல ’ என்ற முழக்கம் நம் குடும்பங்களில் இருந்து ஒலிக்கட்டும்.
 
பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களின் குடும்பம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். யாருக்கும் அஞ்சாமல் அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்த வேண்டும். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை நீதிமன்றம் உறுதிசெய்து, இக்குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களை விரைந்து தண்டிக்க வேண்டும். அதேசமயம், ‘என் உடலை வைத்து நீ என்னை பணியச் செய்ய முடியாது. உன் வக்கிரத்தைவிட என் வெற்றுடல் ஆபாசமானது இல்லை’ என்று பெண்கள் துணிந்து நிற்பதும், அதற்குத் துணையாக நாம் இருப்பதும் அனைவரின் கடமை. ’பாலியல் வன்முறையை’விட ஆபத்தானது, பெண்களுக்கு எதிராக நம் சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் கருத்தியல் வன்முறை என்பதை உணருவோம். 
 
இவ்வாறு நடிகர் சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்