ஜல்லிக்கட்டு விவகாரம்: மௌனம் கலைத்தார் ரஜினிகாந்த்!

சனி, 14 ஜனவரி 2017 (10:52 IST)
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்துவது பற்றி தான் ஒரே பேச்சாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்ற தடையால் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது. ஆனால் இந்த முறை தடையையும் தாண்டி ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவோம் என கூறுகின்றனர் மக்கள்.


 
 
இதனையடுத்து பல அரசியல் தலைவரகள், பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு இந்த வருடம் பெருமளவு அதிகரித்துள்ளது.
 
இந்நிலையில் பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ஜல்லிக்கட்டு குறித்து இதுவரை வாய் திறக்காமல் இருந்து வந்தார். அவரது மகள் சௌந்தர்யா விலங்குகள் நல வாரிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் ரஜினிகாந்தின் கருத்து என்னவாக இருக்கும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
 
ரஜினியின் கருத்தை பலரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் முதன் முறையாக ரஜினிகாந்த் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மௌனம் கலைத்துள்ளார். நேற்று நடந்த விகடன் விருது வழங்கும் விழாவில் தான் ரஜினிகாந்த் தன்னுடைய கருத்தை தெரிவித்தார்.
 
கமல், விஜய் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த்,  ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரம், கலாச்சாரத்தில் எப்போதும் கைவைக்கக் கூடாது. என்ன கட்டுப்பாடு வேண்டுமானாலும் விதியுங்கள். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்காதீர்கள்.
 
பெரியவர்கள் ஒரு கலாச்சாரத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்கள். அதனை நாம் காப்பாற்ற வேண்டும். சில கட்டுப்பாடுகளை விதியுங்கள், ஆனால் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்