அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே! ரிபப்ளிக் டிவிக்கு எதிராக சுப.உதயகுமாரன் அறிக்கை
சனி, 24 ஜூன் 2017 (02:37 IST)
கூடங்குளம் அணு உலை உள்பட பல்வேறு போராட்டங்களை மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராடி வரும் சுப.உதயகுமாரன், வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று கொண்டுதான் இந்த போராட்டத்தை நடத்துவதாக ரிபப்ளிக் டிவி வீடியோ ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் ரிபப்ளிக் டிவி மீது பிரஸ் கவுன்சிலில் சுப.உதயகுமாரன் புகார் செய்து உள்ளார். ஆனால் ரிபப்ளிக் டிவி என்பது எலக்ட்ரானிக் மீடியா என்றும், இந்த புகார் மீது பிரஸ் கவுன்சில் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுப.உதயகுமாரன் தன்னிலை விளக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
"நான் உண்மையானவன்; ஒழுக்கமானவன்; உறுதியானவன் என்பதை முழுமையாக நம்புகிற, எனக்கு ஆதரவாக என்னுடன் நிற்கிற எனது மனைவி, பெற்றோர், குழந்தைகள் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். எனது பல்வேறு சமூக, அரசியல் செயல்பாடுகளால் அவர்களின் அமைதியான வாழ்க்கையை பல ஆண்டுகளாக நான் பெரிதும் பாதிப்படையச் செய்திருக்கிறேன். அது எனக்கு மிகப்பெரிய குற்ற உணர்வைத் தந்தாலும், இவர்கள் எங்கேயும், எந்த இடத்திலும் எனது நிமித்தமாக தலைகுனிந்து நிற்கவேண்டியது வரவில்லை என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நீண்டகாலமாக என்னோடு தொடர்ந்து பயணிக்கும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், பூவுலகின் நண்பர்கள், பச்சைத் தமிழகம் போன்ற இயக்கங்களின் நண்பர்கள், என்னை நன்கு அறிவார்கள், இரும்பனைய உறுதியோடு இப்போதும் என்னோடு நிற்கிறார்கள். அவர்களுக்கும் என் நன்றி. உலகெங்கும் உள்ள எனது ஆருயிர் நண்பர்கள், பல்வேறு இயக்கங்களை, கட்சிகளைச் சேர்ந்த தோழர்கள் எனக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும், இயங்கிக்கொண்டும் இருக்கிறார்கள். வீட்டிற்கு வந்து என்னைப் பார்த்து ஆறுதலும், தேறுதலும் சொல்லிச் செல்கிறார்கள். அவர்களுக்கும் எனது அன்பும், நன்றிகளும்.
தமிழக ஊடகத் தோழர்கள் என்னை நன்கு அறிவார்கள். ஒரு விதத்தில் பார்க்கும்போது, இடிந்தகரை, கூடங்குளம், கூத்தன்குழி பகுதி சகோதர, சகோதரிகளைவிட, பாமர மீனவச் சொந்தங்களைவிட, நெல்லை மாவட்ட ஊடக நண்பர்களால்தான் நான் உருவாக்கப்பட்டேன். எனக்கு பேசச் சொல்லித்தந்து, நான் பேசியதை இரவு, பகல் என்று பாராமல் பதிவுசெய்து, உலகெங்கும் கொண்டு சென்றவர்கள் அவர்கள். என்னை, எனது வாழ்வை, வாழ்க்கை முறையை, என் குடும்பத்தை முழுமையாக அறிந்தவர்கள்.
பிரதமர் நரேந்திர மோடியின், மக்கள் விரோத மத்திய அரசும், பாசிச சங்கப் பரிவாரமும், தமிழர்களை ஏமாற்றி மக்கள் அதிகாரத்தைத் திருட நினைக்கும் நடிகர் கும்பலும், இவர்களின் ஆரியத்துவ ஊடக எடுபிடிகள் சிலரும் சேர்ந்து, திட்டமிட்டு ஜூன் 20-ம் தேதி என் மீது சேற்றைவாரி இறைத்துக் கொண்டிருக்கும்போது, நெல்லை ஊடக நண்பர்கள் பலர் கவலையோடு அழைத்து, “அண்ணா, உங்களை கைதுசெய்யப் போவதாகப் பேசிக்கொள்கிறார்கள்” என்று அன்புடன் விசாரித்தார்கள். குமரி முதல் சென்னை வரையுள்ள ஊடக நண்பர்கள், எனது உண்மையை, ஒழுக்கத்தை, ஒருமைப்பாட்டை அறிவார்கள்; அதனால்தான் ஆரியத்துவ ஊடகம் செய்த சதியை தமிழக ஊடகங்கள் அப்படியே குப்பைத்தொட்டியில் தூக்கிப்போட்டுவிட்டு, “எங்கள் வீட்டுப் பிள்ளையை எங்களுக்குத் தெரியும், நீ என்ன சொல்வது?” என்று புறந்தள்ளினார்கள். தமிழினம், தமிழகம், தமிழர் அரசியல் சரியான பாதையில் போகத்தொடங்கி விட்டது என்பதற்கு அருமையான சான்று இது.
அதிகார வர்க்கத்தின் சதிச் செயல்!
அணுசக்தித் துறைக்கு, அதன் திட்டங்களுக்கு எதிராக களமாடத் தொடங்கியபோதே எப்படியெல்லாம் தொந்தரவு செய்வார்கள்? என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பதையெல்லாம் நான் அறிந்திருந்தேன். அதனால்தான் தனிமனித ஒழுக்கத்திலும், வரவு-செலவு விஷயங்களிலும், வாழ்வின் பிற அம்சங்களிலும் உண்மையாக இருந்தேன், இப்போதும் இருக்கிறேன். அப்படித்தான் மத்திய இணை அமைச்சர் ஒருவரின், இந்தியப் பிரதமர் ஒருவரின் பொய்யானக் குற்றச்சாட்டுக்களை ஊதித்தள்ள முடிந்தது. அவர்கள் மீது வழக்குத் தொடுக்க முடிந்தது. இந்தியாவின் உச்சபட்ச உளவு நிறுவனமான ஐ.பி, ஓர் அறிக்கை வெளியிட்டபோது, அதை மறுக்க, எதிர்க்க முடிந்தது.
தமிழரை-தமிழகத்தை அணுத்தீமையில் இருந்து காப்பது, தோழமை இயக்கங்களுடன் மாதம்தோறும் “பாசிசக் கண்காணிப்பு” கூட்டம் சென்னையில் நடத்துவது, திரையுலகப் பிரபலத்தால் நாடாள விரும்புவதை எதிர்ப்பது, பார்ப்பனீயம் தமிழகத்தை, இந்தியாவை, எல்லாத் தரப்பு மக்களையும் விழுங்கி ஏப்பமிட முயல்வதை "உலக அக்ரஹாரம்" எனும் தலைப்பில் பதிவிடுவது, தமிழகமெங்கும் சுற்றித் திரிந்து வளர்ச்சி என்கிற பெயரில் நம் வளங்களை, வாழ்வாதாரங்களை அழிக்கும் முயற்சிகளை எதிர்ப்பது, அரசியல் தளத்தில் தமிழ்க் கட்சிகள் மற்றும் அமைப்புகளை ஒன்றிணைக்க முயல்வது, சிறுபான்மை மக்களை வழிநடத்தும் தலித் - கிறிஸ்தவ - இஸ்லாமிய இயக்கங்களோடு கைகோர்த்து இயங்குவது போன்ற காரணங்களால் மத்திய அதிகார வர்க்கம் என்னை செயலிழக்கச் செய்ய முயற்சிக்கிறது.
கடந்த 1998-ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு அமைந்த நேரத்திலேயே “பா.ஜ.க. அரசு கண்காணிப்பகம்” (BJP Government Watch) ஒன்றைத் தொடங்கி பாசிச சங்கப் பரிவாரத்தை எதிர்த்தவன். இன்றும் உறுதிபட பாசிச எதிர்ப்புக் களத்தில் நிற்பவன் என்பதால் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கும்பலும், இவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களும் என்னை மிக மோசமாக நிந்திக்கின்றனர். இந்த “இந்துக் கலாச்சாரக் காவலர்கள்” எழுதும் கண்ணியம்மிக்க வாசகங்களை, “அறமும், தர்மமும்” தோய்ந்த அவர்களின் உணர்வுகளை எனது முகநூல் பக்கத்திலுள்ள சில ஆரியத்துவப் பின்னூட்டங்களிலிருந்து அறிந்துகொள்ள முடியும். இவர்கள் இன்னும் ஒருமுறை ஆட்சிக்கு வந்தால், நாடு என்னவாகும்? என்னென்ன நடக்கும் என்பதை நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.
நாடாளத் துடிக்கும் நடிகரை அம்பலப்படுத்துவது தவறா?
அரசியல் அறிவோ, ஆற்றலோ, அனுபவமோ எதுவுமின்றி, தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது, அதை ஆக்கிரமிக்க "ஆண்டவன்" பணமும், அனுமதியும் தருகிறார். ஆண்டு அனுபவித்து விடுவோமே என்கிற அடிப்படையில் சிலர், திரையுலக பிரபலம், பிறரின் பணபலம், ரசிகர் படைபலத்தோடு வீட்டுக்குள் இருந்தவாறே வீதியில் நின்று போராடுவது போலத் தோற்றமளிக்கும் “நடிப்பு அரசியல்” செய்ய விரும்புகின்றனர். “நரைகூடிக் கிழப்பருவம்” அடைந்துவிட்ட அவர்களின் முன்னாள் ரசிகர்கள், 'அரசியல் அதிகாரமும் அதன் பலாபலன்களும் தங்கள் வீட்டின் முன்னால் வந்து நிற்கும்போது, வீணாக சத்தம்போட்டு கலைக்க முயல்கிறானே' என்று என்மீது கடும் கோபம் கொள்கின்றனர். அவர்களின் விரக்தி, வேதனை கோபக் கனல்களாய், கொடும் வார்த்தைகளாய் வெளிப்படுகின்றன. இவர்களின் நாசிஸ்ட் “தலைவர்” மீதான பக்தி பரவசத்தையும் எனது முகநூல் பின்னூட்டங்களில் காணலாம்.
பாசிஸ்டுகளும், நாசிஸ்டுகளும் கூட்டணி அமைத்து அதிகாரத் திருட்டு நடத்த திட்டமிடுவதைத் தடுப்போம். நேரடியாக எதுவும் செய்ய முடியாத பா.ஜ.க.வும், அதன் சங்கப் பரிவார பாசிச சக்திகளும், தமிழ் மக்களின் அதிகாரத்தைத் திருட நினைக்கும் நடிகர் கும்பலும், மக்கள் விரோத மத்திய அரசும் ஒன்று சேர்ந்து சூழ்ச்சிகள்செய்து என்னைக் கேவலப்படுத்த, சோர்வடையச் செய்ய நினைக்கின்றனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மூன்று மற்றும் நான்காவது அணு உலைகளுக்கான பணிகள் ஒருவாரத்தில் தொடங்கவிருப்பதால், அதனை எதிர்த்து வரும் எனக்குஎதிராக உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு, என் மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்ப்பது, என்னை தனிமைப்படுத்துவது, தமிழ்க் குடிமைச்சமூகத்தை மதவெறி பாசிசக் கொள்கையின் உதவியோடு தேச பக்த இந்துக்கள் – தேசத்துரோக கிறிஸ்தவர்கள் என்று பிரித்தாள்வது போன்ற செயல்களில் அந்த தொலைக்காட்சியின் கோ(ழை)சாமிகள் மூலம் முயற்சிக்கின்றனர். என்னைச் சுற்றி பல நெருப்புகளை மூட்டி சுட்டெரிக்க முயற்சிக்கின்றனர். மக்கள் இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, தங்களின் அணுஉலை அழிவுத்திட்டத்தின் அடுத்தக் கட்டத்தை எந்தவிதமான எதிர்ப்புமின்றி நிறைவேற்றிவிட அவர்கள் எத்தனிக்கிறார்கள்.
உண்மையில், சுடப்படாத சுண்ணாம்பும், புடம்போடப்படாதத் தங்கமும், வேகவைக்கப்படாதச் செங்கலும், வேதனைகள் அனுபவிக்காத மனித மனமும் ஒரு பொருட்டாவதேயில்லை. கணவன் இராமனால் சந்தேகிக்கப்பட்ட சீதாப்பிராட்டி தீக்குளித்து ஒளிப்பிழம்பாய் உயர்ந்து ஓங்கியதுபோல, அரசால் எரிக்கப்படும் நான் “உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாம்” எனும் பாரதி கூற்றுக்கு இணங்க ஒளி பெற்று நிற்கிறேன். இந்த உள்ளொளியும், வாக்கொளியும் வழிநடத்துவதால் “அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே” என்று பாடிக்கொண்டே என் பயணத்தைத் தொடர்கிறேன்’’ எ
இவ்வாறு சுப. உதயகுமாரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.